BREAKING NEWS

பிஸ்மில்லாஹ் என்று இறைவன் நாமத்தை கூறாது பிஸ்மி மஹிந்த என்றே சொல்லி உணவு உண்ணுவார் அஸ்வர்

மஹிந்த ராஜபக்ஷவின் நாமத்தை உச்சரித்து வந்தால் நன்மை பயக்கும் என ஏ. எச். ஏம். அஸ்வர் நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக உள்ளது என்பதால் இதற்காக அவர் தவ்பா செய்வதுடன் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.

அஸ்வரின் இக்கருத்து சம்பந்தமாக உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
இஸ்லாத்தை பொறுத்தவரை இறைவனின் பெயரை உச்சரிப்பதால் மட்டுமே ஒருவனுக்கு நன்மை கிடைக்கும் என்றும் இறைவன் அல்லாதவன் பெயரை உச்சரிப்பதால் நன்மை கிடைக்கும் என ஒருவர் நம்பினால் அவர் இணைவைத்து விட்டார் என்பதே இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும். இது பற்றி நன்கு தெரிந்திருந்தும் ஏ எச் எம் அஸ்வர் இவ்வாறு பேசியிருப்பதன் மூலம் அவர் இஸ்லாத்தை வேண்டுமென்றே அவமதித்துள்ளதோடு தனது எஜமான விசுவாசத்துக்காக இறைவனைக்கூட உதாசீனம் செய்துள்ளமை முஸ்லிம் சமூகத்துக்கு மிகப்பெரிய அவமானமாகும்..

நாடாளுமனறம் என்பது மக்களின் பிரச்சினைகளைப்பற்றி பேசுவதற்கும் அவற்றுக்கான தீர்வுகளை பெறுவதற்குமான உயரிய இடமாகும். அப்படியான இடத்தில் பேசப்படும் அனைத்து விடயங்களும் பதிவு செய்யப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரின் இக்கூற்று இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிகப்பெரிய அழுக்காகவே பதிவு செய்யப்படும். இவருடைய கூற்றை பார்க்கும் போது இவர் உணவு உண்ணும் போதும் பிஸ்மில்லாஹ் என்று இறைவன் நாமத்தை கூறாது பிஸ்மி மஹிந்த என்றே சொல்லி உணவு உண்ணுவார் என தெரிகிறது. இத்தகைய ஒருவர் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சராக இருந்ததை எண்ணி வெட்கப்படுகிறோம்.

இன்றைய பதவிகள் என்பன உலகின் இன்பங்களாகவும் சோதனைகளாகவுமே உள்ளன. அப்பதவிகளுக்காக இஸ்லாத்தையே அவமதிப்பது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். ஆகவே அஸ்வர் தனது இணைவைப்பு கருத்திற்காக மன்னிப்பு கோருவதோடு இதற்கெதிராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பகிரங்க தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar