BREAKING NEWS

பள்ளிவாயல் தாக்குதல்களை கண்டித்து அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சி மட்டுமே

பள்ளிவாயல் தாக்குதல்களை கண்டித்து அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சி மட்டுமே என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அண்மையில் கல்முனையில் நடைபெற்ற சப்ரகமுவ பல்கலைக்கழக பட்டதாரியான நபீஸ் முஹம்மத் தலைமையிலான பொத்துவில் பகுதி கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது

   
இந்த அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் ஆட்சிக்கு கொண்டு வருவதில் மிக கடுமையாக உழைத்தவர்களில் முஸ்லிம் சமூகத்தை பொறுத்த வரை நாம் பிரதானமானவர்கள் என்பதை உலகம் அறியும். இரத்த ஆறு ஓடிய இந்த நாட்டில் சகல சமூகமும் சமாதானமாய் வாழ வேண்டுமென்பதற்காகவே நாம் கடுமையாக ஆதரவு வழங்கினோம். ஆனால் வழமை போன்று நன்றி என்பது பெரும்பாலான அரசியல்வாதிகளிடம் பார்க்க முடியாது என்பதைக்கண்டோம். அத்துடன் யுத்த வெற்றி என்பது சிங்கள மக்களினது வெற்றியாக மட்டும் கணிக்கப்பட்டு ஏனைய இனங்கள் ஒடுக்கப்பட ஆரம்பித்த போது அதனை நாம் அரசுக்கு பல கடிதங்களில் சுட்டிக்காட்டினோம். ஆனாலும் எமது ஆலோசனைகள் எடுபடாமல் இறுதியில் தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதலுக்குள்ளானது. அதனை தொடர்ந்து தெஹிவல பள்ளிவாயலுக்கும் கல் எறியப்பட்டது.

இந்தப்போக்கு தொடரக்கூடிய சாத்தியக்கூறுகள் தெளிவாக தென்பட்டதால் நாம் அரசிலிருந்து விலகுவதே சமூகத்தின் தன் மானத்தைக்காக்கும் என்பதால்; விலகினோம். அவ்வாறு விலகிய நாம் சிலரைப்போன்று அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பவரின் தலைமையிலான கட்சியில் சேரவில்லை. ஆவர்கள் அரசை எதிர்க்க வேண்டுமென்பதற்காக அரசிலிருந்து விலகி அரச அமைச்சர் தலைமையிலான கட்சியில் சேர்ந்து வாக்குக்கேட்டு மக்களை ஏமாற்றிய பின் அக்கட்சி தொடர்ந்து அரசுடன் இருப்பதை பார்த்து புலம்பித்திரிகின்ற அரசியலை நாம் செய்யவில்லை. மாறாக நாம் இணைந்திருந்த அரச அமைச்சர் ஒருவரின் தலைமையிலான கட்சியிலிருந்தும் விலகி தனித்துவமாக செயற்பட்டதோடு அரசை எதிர்ப்பதாயின் எதிர்கட்சிக்கு ஆதரவு தருவதே சரியானது என்ற நிலைப்பாட்டில் நாம் ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த கிழக்கு மாகாண சபையில் ஆதரவு வழங்கினோம். முஸ்லிம்கள் எமது பேச்சை கேட்டிருந்தால் இப்போது அனுராதபுர பள்ளிவாயலுக்கு ஒப்பாரி வைக்க வேண்டி வந்திருக்காது.

2005ம் ஆண்டு நாம் இந்த ஜனாதிபதியை ஆதரித்த போது ஐ தே கவுடன் இருந்து கொண்டு ஜனாதிபதியையும் எம்மையும் கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று அரசுடன் ஒட்டிக்கொண்டு சுகம் அனுபவிக்கிறார்கள். முஸ்லிம்களின் தனித்துவ குரல் என்றவர்கள் தனித்துவமாக அடிமையாகிப் போயுள்ளார்கள். எத்தனை பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டாலும் இவர்கள் அடுத்த பொதுத்தேர்தல் வiர் அரசுடன்தான் ஒட்டியிருப்பார்கள். காரணம் இவர்களுக்கு சமூகத்தை விட தமது பதவிகள் மட்டுமே முக்கியமானது.

நாம் அறிக்கை மட்டுமே விடுவதாக எம்மைப்பற்றி சிலர் விமர்சிக்கின்றனர். நாம் அரசுடன் இருந்த போது பெரிய கட்சிகளால் செய்ய முடியாதவற்றையும் சாதித்துக்காட்டியுள்ளோம். அவற்றை தெரியாமல் எம்மை விமர்சிக்கும் இவர்களுக்கு ஜனநாயக நாடொன்றின் அரசியல் எவ்வாறு இருக்கும் என்பது பற்றி தெரியாது. ஒரு ஜனநாயக நாட்டில் ஆளுந்தரப்பு எதிர் தரப்பு என்பன இருக்கும். ஆளுந்தரப்பு அமைச்சர்களையும், பதவிகளையும் கொண்டிருப்பதால்; அது நாட்டை வழி நடாத்தும். எதிர் கட்சியிடம் எத்தகைய அரசியல் பதவியும் இல்லாததால் அரசாங்கத்தின் பிழைகளை விமர்சிப்பதன் மூலம் சரியான வழிகாட்டல்களை தனது அறிக்கைகள் மூலம் காட்டும். இந்த அடிப்பமையில்தான் எமது கட்சியும் காத்திரமான அறிக்கைகளை விடுகின்றது. அவை அரசியலில் பெரும் கவனிப்பை ஏற்படுத்துகின்றது என்பதால்தான் நாம் இரகசிய பொலிஸ், மற்றும் அரச தரப்பு அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுக்கிறோம்.

நாம் இந்த நாட்டு முஸ்லிம்களின் சிறிய கட்சியாக இருக்கலாம். ஆனாலும் இறைவன் உதவியால் பாரிய எதிர் கட்சியின் செயற்பாடுகளை கொண்டிருக்கிறோம். இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அமைச்சர்களின் தலைமையில் இல்லாத, அரசாங்கத்தின் எந்தவொரு பதவியிலும் ஒட்டியிராத ஒரேயொரு பிரபல்யமான முஸ்லிம் கட்சி என்றால் அது உலமா கட்சிதான் என்பதை எவரும் உறுதியாக கூறுவர். அரச பதவிகளை கருத்திற்கொள்ளாமல் சமூகத்துக்காக என அரசியல் செய்ய முன்வந்துள்ள உங்களைப்போன்ற இளைஞர்களும் எம்மோடு இருப்பது மனதுக்கு நிறைவு தருகின்றது. நாம் எந்த வேளையிலும் இந்த உலகை விட்டுச்செல்லலாம். ஒரு புல்லட்டின் மூலம் எமது வாழ்வு முடிவுக்கு வரலாம். அதற்கான சமிக்ஞைகள் நிறையவே கிடைக்கின்றன. ஆனாலும் இன்ஷா அள்ளாஹ் இந்த சமூகம் வாழும், வாழ வேண்டும். அந்த சமூகத்தின் தன்மானமிக்க அரசியலுக்கு எமது வழிகாட்டல் சரியாக அமைய வேண்டும் என்பதே எமது இலக்காகும்.
நாங்கள் மக்களின் வாக்குகளை எதிர் பார்த்து அரசியல் செய்பவர்களாக இருக்கக்கூடாது. அது சுய நல அரசியலாகும். மக்கள் வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும் உயிருள்ள வரை முஸ்லிம் சமூகத்தின் உண்மையான குரலாக செயற்பட வேண்டும் என்பதே எமது இலக்காகும் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar