BREAKING NEWS

மினாவுக்கு வெளியே ஹாஜிகள் தங்க வைக்கப்பட்டது சரியா?

இம்முறை ஹஜ்ஜின் போது ஹாஜிகள் மினா எல்லைக்குள் தங்க வைக்கப்படாமல் மினாவுக்கு வெளியே தங்க வைக்கப்பட்டார்கள் என்ற செய்தி ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தங்க வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை அறிந்தவுடன் இது சம்பந்தமான செய்தியை சுடர் ஒளி பத்திரிகை முன்பக்க செய்தியாக தந்து சமூகத்தை விழிப்படைய செய்தது. இதற்காக அப்பத்திரிகைக்கு நாம் நன்றி சொல்லிக்கொள்கிறோம்.
மிகவும் பாரதூரமான இந்த விடயத்தை ஏதோ சாதாரண ஒன்று என்பது போல் அமைச்சர் பௌசியும், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள பணிப்பாளரும் அறிவித்துள்ளமை கவலை தரும் ஒன்றாகும். உலமாக்களின் மார்க்க தீர்ப்பின்படியே மினா எல்லையில் ஹாஜிகள் தங்க வைக்கப்பட்டனர் என இவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஹஜ் என்பது அரசியலோ, வியாபாரமோ, உல்லாசப்பிரயாணமோ அல்ல. அது
இறைவனுக்குச்செய்யும் கடமையான ஒன்றாகும். அக்கடமையை இறைவனும் அவனது தூதரும் சொன்ன பிரகாரம் நிறைவேற்ற வேண்டுமே தவிர மனிதர்கள் தம் இஷ்டம் போல் நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
ஹஜ்ஜுக்காக செல்லும் ஒருவர் அரபா மைதானத்திலிருந்து வந்ததும் மறுநாள் மினா எல்லைக்;குள் தங்குவது, இரவைக்கழிப்பது கட்டாய கடமையாகும். இவ்வாறு தங்காதவரின் ஹஜ் செல்லுபடியற்றதாகும் என்பதையே குர்ஆன் சுன்னா மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. மினா என்பது இரண்டு மலைகளுக்கிடைப்பட்டதாகும் என நபியவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அத்துடன் முஸ்தலிபாவுக்கு போகும் வழியில்
உள்ள மினா முடிவை அறிவிக்கும் எல்லைக்கோபுரம் மிகப்பெரிதாக உள்ளது. இதனை நான் எனது முதலாவது ஹஜ் பயணத்தை 1980ம் ஆண்டு மேற்கொண்டது முதல் இன்று வரை பாhக்கின்றேன். இதுதான் மினாவின் எல்லை என அறபு, ஆங்கிலம் போன்ற பெரியஎழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன.

மினாவுக்குள் தங்க இடங்கிடைக்காத ஹாஜிகள் மினாவுக்கு வெளியே மேற்;படி எல்லைகோபுரத்தை தாண்டி நிற்கக்காணப்பட்டால் சஊதி அரேபிய உலமாக்கள் அங்குபிரசன்னமாகி அங்கு தங்க வேண்டாம் என்றும் மினாவுக்குள் சென்று தங்க வேண்டும் எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பதை எனது 12 வருட ஹஜ்ஜுகளின் போது நான் கண்ட உண்மையாகும். மினாவுக்கு வெளியே தங்குபவரின் ஹஜ் செல்லுபடியாகும் என சஊதி உலமாக்கள் சொன்னதாக 12 வருடங்கள் தொடராக ஹஜ் காலத்தில் ஹாஜிகளுக்கு ஊழியம் செய்தவன் என்ற நிலையில் நாம் காணவே இல்லை. ஆனால் அப்படி ஒரு பத்வாவை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் பௌசி மற்றும் திணைக்கள பணிப்பாளர் சொல்லியிருப்பது பாரதூரமாதன விடயமாகும். அந்த பத்வாவை அவர்கள் ஊடகங்களுக்கு இன்னமும் வெளியிடவில்லை. ஆகவே மினாவுக்கு வெளியே தங்குவதன் மூலம் ஹஜ்; செல்லுபடியாகும் என கூறும் சஊதி அரேபிய பத்வாவை அப்படியே முழுமையாக வெளியிடுவது இவர்கள் மீதுள்ள கடமையாகும்.
அவ்வாறு மினாவுக்கு வெளியே தங்குவதன் மூலம் ஹஜ் ஆகுமானதாகும் என்றால் அதனையொட்டிய சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாகும். இக்கேள்விகளை அமைச்சர் பௌசியிடமும், திணைக்கள பணிப்பாளரிடமும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளும் இதற்கு உடன்பட்டார்கள் என சொல்லப்படுவதால் அவர்களிடமும் இவற்றை நான் முன் வைக்கிறேன்.
1. மினாவுக்கு வெளியே ஹாஜிகள் தங்க வைக்கப்படுவது கூடுமாயின் ஏன் அவர்கள் மினாவுக்கு வெளியே கூடாரங்களில் தங்க வைக்கப்பட வேண்டும்? பேசாமல் மக்காவிலேயே அவர்கள் குளிரூட்டப்பட்ட தமது அறைகளிலேயே தங்க வைக்கப்படலாமே?
ஹஜ்ஜுக்கு போகும் ஒருவர் தான், மக்காவில் தங்குவதற்கன்றே சில லட்சங்களை அதற்கு மட்டும் என்றே செலுத்துகின்றார். அந்த தங்குமிடத்தை காலியாக்காமல் அப்படியே விட்டு விட்டு மினாவில் தங்குவதற்குரிய கூடாரத்துக்கும் பணம் செலுத்துகிறார். மினாவிலிருந்து வந்ததும் மீண்டும் தனது அறையில் தங்குவதற்கேற்ப தங்காத நாட்களுக்கும் சேர்த்தே அவர் பணம் செலுத்துகிறார். இந்நிலையில் மினா எல்லைக்கு வெளியே தங்கினால் ஹஜ் கூடுமாயின் ஏன் மினாவுக்கு வெளியே உள்ள கூடாரத்துக்கென வேறாக பணம் பெற வேண்டும’? ஏன் மினாவுக்கு வெளியே வெய்யிலில் ஹாஜிகள்  காய வேண்டும்? பேசாமல் மக்காவில் உள்ள தமது அறையில் தங்கி காலையில் கல் எறிவதற்கு மட்டும் மினா வந்தால் போதுமானது தானே!

2. இலங்கை ஹாஜிகளில் 25 வீதமானோர் மினாவுக்குள்ளும் 75 வீதமானோர்
வெளியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருவரது ஹஜ்ஜும் ஒன்று என்றால் அனைவரையும் மினாவில் தங்குவதை நிறுத்தி அவர்களை மக்காவில் தங்க வைக்க சொல்லி விட்டு அவர்களது மினாவுக்கான பணத்தை திருப்பி கொடுக்க வைத்திருக்கலாமே. மாறாக சிலர் மினாவிலும் பலர் வெளியிலும் தங்க வைக்கப்பட்டதால் இருவரின் ஹஜ்ஜும் ஒரே தரமானதுதான் என குர்ஆன், ஹதீத் ஆதாரத்துடன் விளக்கம் தர முடியுமா?
3. மினாவினது எல்லைக்கும் முஸ்தலிபாவுக்கும் இடையில் உள்ள ஓடையால் நபி (ஸல்) நடந்து செல்கையில் மிக விரைவாக செல்வார்கள் என்றும் காரணம் கேட்கப்பட்ட போது அந்த ஓடையில்தான் அப்ரஹாவின் யானைப்படை அழிக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார்கள். இலங்கை ஹாஜிகள் இந்தப்பயங்கர ஓடையின் அருகே தங்க வைக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய அநியாயமாகும். நபியவர்கள் விரைந்து கடந்த ஓடை அருகே இலங்கை ஹாஜிகள் உறங்கவே வைக்கப்பட்டுள்ளார்கள். இது நபி வழிக்கு முரண் இல்லை என உலமா சபை கூறுமா?

4. இம்முறை ஹாஜிகள் மினாவுக்கு வெளியே தங்க வைக்கப்பட்டதன் மூலம் அவர்களது ஹஜ் செல்லுபடியாகும் என்றிருக்குமாயின் எதிர் வரும் வருடங்களில் மினாவில் கூடாரமே தேவையில்லை என்றும் அதற்குரிய பணம் ஹாஜிகள் செலுத்தத்தேவையுமில்லை என்றும் அரச ஹஜ் குழு பிரகடனப்படுத்துமா? அவ்வாறாயின் எதிர் வரும் வருடங்களில் ஹாஜிகள் மினாவுக்கு செல்லாமல் மக்காவிலேயே தங்கி கல் எறிய மட்டும் போய் வந்தால் போதும் என ஜம்இய்யத்துல் உலமா பகிரங்கமாக அறிவிக்குமா?
5. நபி வழியில் ஹஜ் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிய கொஞ்ச நஞ்ச அறிவும் இல்லாதோரே ஹஜ்ஜுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது இவர்களாகவே ஆதாரங்களை முன் வைக்காது சஊதி உலமாக்கள் பத்வா தந்துள்ளார்கள் என மொட்டையாக கூறியுள்ளமை மூலம் தெரிகிறது. யார் என்ன பத்வா தந்தாலும் அது குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் முரண் இல்லாததாக இருக்க வேண்டும். குறைந்தது அந்த பத்வாக்கள்pல் எந்த நபிமொழி மூலம் ஆதாரமாக வைக்கப்பட்டுள்ளது எனபதையாவது இவர்களது தமது அறிக்கையில் கூறியிருக்கலாம். அதனைக்கூட செய்யாமல் விட்டதன் மூலம் மேற்படி பத்வாவை இவர்கள் வாசிக்கவில்லை என்றே தெரிகிறது.

ஆகவே மினாவுக்கு வெளியே ஹாஜிகள் தங்க வைக்கப்பட்டமை நபிவழிக்கு முரணானதாகும். இவ்வாறு ஹாஜிகளின் பணத்தையும் ஹஜ்ஜையும் வீணாக்கியமைக்கான பொறுப்பை ஏற்பது யார் என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் இதற்கான பொறுப்பை  இலங்கை அரசே ஏற்க வேண்டும். இதற்குரிய பதிலை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக
தர வேண்டும் என  கேட்டுக்கொள்கிறேன்.
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
(பீ. ஏ- ஜெர்னலிசம்)
மதீனாவில் அச்சிடப்பட்ட அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பாளர்
பிரதம ஆசிரியர்: அல்ஜஸீறா
தலைவர் உலமா கட்சி

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar