BREAKING NEWS

முஹர்ரம் மாத ஆரம்பத்தை தீர்மானிப்பதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தடுமாற்றம்

ஹிஜ்ரி ஆண்டுக்கான முதலாவது மாதமான முஹர்ரம் மாத ஆரம்பத்தை தீர்மானிப்பதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தடுமாற்றமும் தீர்மானமும் ஹிஜ்ரி ஆண்டு என்பது உலகளாவிய நிர்வாக நடைமுறைக்கு ஏற்புடையதல்ல என்பதையே காட்டியுள்ளமை பாராதூரமான விடயமாகும் என அகில இலங்கை உலமா கட்சித்தலவர்
மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்துக்கான முஹர்ரம் மாதம் என்பது வெள்ளிக்கிழமை என்றும் பின்னர் சனிக்கிழமை என்றும் உலமா சபையால் அறிவிக்கப்பட்டது பற்றிய உலமா கட்சியின் கருத்தை ஊடகவியலாளர் கேட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
உண்மையில் ஹிஜ்ரி ஆண்டு என்பது இஸ்லாமிய வருடமாக கருதப்பட மாட்டாது. அது இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மதீனாவுக்கான ஹிஜ்ரத்துடன் ஆரம்பமாகும் ஹிஜ்ரி ஆண்டாகும். நபியவர்களுக்கு முன்பாகவும் உலகில் இஸ்லாமும் முஸ்லிம்களும் வாழ்ந்துள்ளார்கள். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நபி இப்றாஹீம் உண்மையான முஸ்லிமாக வாழந்தார் என குர்ஆன் தெளிவாக கூறுகிறது. ஆகவே முதல் மனிதனும் முதல் முஸ்லிமுமான ஆதம் நபியின் உலகுக்கான (இலங்கையில் கால் பதித்த) வருகையை வைத்து ஒப்பீட்டளவில் நாட்காட்டி ஒன்று தயாரிக்கப்பட்டால் அதுவே இஸ்லாமிய வருடம் என்பதே எமது கருத்தாகும்.

ஆனாலும் இப்போது நடைமுறையில் உள்ள ஹிஜ்ரி ஆண்டுக்கான மாதங்களை ஒவ்வொரு மாதமும் பிறை பார்த்தலின் மூலம் கணிக்கும் இலங்கை உலமா சபையின் வழிமுறை நபிவழியில் இல்லாத பித்அத்தான ஒன்றாகும். நபியவர்கள் நோன்பு மற்றும் பெருநாள் தினங்களுக்கே பிறை பாhத்து முடிவு செய்துள்ளார்கள். ஏனைய மாதங்களை மக்களின் நடைமுறையில் உள்ள தீர்மானப்படி ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

சூரியனை வைத்து கணிப்பிட்டு உலகில் நடைமுறையில் உள்ள ஆண்டுக்கணக்கில் இன்னும் பத்து வருடங்களில் வரும் பௌர்ணமி தினம் எப்போது என்பது கூட குறித்து வைக்கப்பட்டுள்ளது. அதே போல் சந்திரனை வைத்து கணிக்கப்பட்டுள்ள ஹிஜ்ரி ஆண்டிலும் இன்னும் பல வருடங்களின் பின் வரும் முஹர்ரம் மாதம் என்பதும் மக்காவில் உள்ள உம்முல் குறா நாட்காட்டியில் குறித்து வைக்கப்பட்டு;ள்ளது. இந்த நாட்காட்டியெ அறபு நாடுகளின் நிர்வாகத்துக்கும் கணனிக்கும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு இருந்தும் முஹர்ரம் புது வருடத்தை தீர்மானிப்பதில் நமது உலமா சபை தடுமாறுவது கவலை தருகிறது. இதன் மூலம் ஹிஜ்ரி ஆண்டு என்பது நிர்வாக நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்றாக மாறுவதை இவர்கள் சிந்திக்கவில்லை.

இம்முறை முஹர்ரம் மாதம் என்பது உம்முல்குறா நாட்காட்டியின்படி வியாழக்கிழமையே ஆரம்பமாகிறது. அதனையே சகல அறபு நாடுகளும் தமது நாட்காட்டியாக நடைமுறைப்படுத்துகின்றன. சஊதி அரேபியா கூட நோன்பு, ஹஜ் ஆகிய மாதங்களை பிறை பார்த்து அறிவித்தாலும் உம்முல்குறாவின் நாட்காட்டியின் படியான தினங்கள் மாறுவதில்லை. ஆனால் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டு;ள்ள  சுன்னாவுக்கு முரணான இந்நடைமுறையின் காரணமாக சஊதியில் ஒரு திகதியும் இலங்கை முஸ்லிம்களிடம் இன்னொரு திகதியும் இருப்பது நிர்வாக நடைமுறையை கேள்விக்குட்படுத்துகிறது.

ஒருவர் முஹர்ரம் மாதம் இரண்டாந்திகதி பயணமாக வேண்டும் என குறிப்பிட்டால் அது அறபு நாடுகளின் முஹர்ரம் இரண்டாம் திகதியா அல்லது இலங்கை முஸ்லிம்களின் முஹர்ரம் ஆண்டின் இரண்டாம் திகதியா என்ற கேலித்தனமான கேள்வி எழுகிறது. இதன் மூலம் இஸ்லாம் என்பது உலகளாவிய ரீதியில் நடைமுறைச்சாத்தியமற்ற மார்க்கமாக கருதப்படும் பிழையான எடுகோளுக்கு இட்டுச்செல்கிறது.

ஆகவே ஹிஜ்ரி ஆண்டை கணிக்கும்போது மக்காவின் உம்முல் குறா நாட்காட்டியை கருத்திற்கொள்வதன் மூலம் ஒரே திகதியை உலகளாவிய முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்துவதோடு நிர்வாக நடைமுறையிலும் எந்தவொரு சிக்கலும் இடம்பெறாது என்பதை உலமா சபைக்கு உலமா கட்சி தெரிவித்துக்கொள்கிறது என முபாறக்  மௌலவி கூறினார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar