BREAKING NEWS

முஸ்லிம்களை இழிவு படுத்தும் வகையில் துப்பாக்கி திரைப்படம்

முஸ்லிம்களை இழிவு படுத்தும் வகையில் துப்பாக்கி திரைப்படத்தில் துர்ப்பாக்கியமாக இடம் பெற்ற காட்சிகளுக்காக இத்திரைப்பட குழுவினர் முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கேட்டதை வரவேற்பதோடு இதற்காக ஜனநாயக ரீதியல் போராட்டம் நடத்திய தமிழக முஸ்லிம்களை பார்த்து இலங்கை முஸ்லிம்கள் பாடம் கற்க வேண்டும் என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,


முஸ்லிம் சமூகத்தின் விடுதலைப்போராட்டத்தை சினிமாவில் கொச்சைப்படுத்துவதை இந்திய, அமெரிக்க சினிமாக்கள் நீண்ட காலமாகவே செய்து வருகின்றன. சுமூக விடுதலைப்போராளிகள் சில தவறுகளை விடுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் மேற்படி திரைப்படங்களில் மிக மோசமானவர்களாக முஸ்லிம்கள் மட்டுமே சித்தரிக்கப்பட்டு வருவதை அறிவோம்.

இந்த வகையிலேயே துப்பாக்கி படத்தில்; முஸ்லிம்களை இழிவு படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதனை தமிழ் இனத்தின் விடுதலையை விரும்பும் தமிழர்கள் செய்திருப்பது  வேதனையானதாகும். இலங்கை தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடியவர்களும் பல பாரிய தவறுகளை செய்துள்ளார்கள். ஆனாலும் அவர்களின் சமூக உணர்வையும், சமூக விடுதலைக்கான உயிர்த்தியாகப்போராட்டத்தையும் எவரும் கொச்சைப்படுத்த முடியாது. இவ்வாறான இந்தப்போராளிகளை வைத்து தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றும், மோசமானவர்கள் என்றும் முஸ்லிம்கள் திரைப்படம் தயாரித்தால் தமிழர் சமூகம் அதனை ஜீரணிக்குமா என கேட்கின்றோம்.

துப்பாக்கி திரைப்படத்திற்கெதிராக தமிழ் நாட்டு முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்ததை நாம் வெகுவாக பாராட்டுகின்ற அதே வேளை இத்திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை நீக்குவதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் உடன் பட்டுள்ளதால் மேற்படி திரைப்படம் இலங்கையிலும் திரையிடப்பட்டுள்ளதால் அதில் அக்காட்சிகள் நீக்கப்பட்டதாக இலங்கை திரைப்பக்கூட்டுத்தாபனம் இன்னமும் அறிவிக்காதது கவலையை தருகிறது.

ஆகவே மேற்படி காட்சிகளை இலங்கையில் நீக்குவதற்கு அல்லது முற்றாக இப்படத்தை தடை செய்வதற்கு இலங்கை முஸ்லிம்கள் விழிப்புணர்வு பெறுவதோடு முஸ்லிம் அமைச்சர்களும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இவற்றுக்காக உடனடியாக முன்வர வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar