உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு சம்பந்தமான நிகழ்வுகளை முன்னெடுப்பதில் கவிஞர் தாசிம் அஹமது அவர்கள் வேண்டுமென்றே ஓரங்கட்டப்பட்டவரா என்பதை மாநாட்டின் தலைவர் என்ற வகையில் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெளிவு படுத்த வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவரும் உலக இலக்கிய மாநாட்டின் மீடியா குழுவின் உறுப்பினருமான முபாறக் அப்துல் மஜீத் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது விடயமாக கூறியள்ளதாவது,
2002ம் ஆண்டுக்குப்பின் மீண்டும் இலங்கையில் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு நடைபெறவிருப்பது பெரு மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இதற்கு மேடைப்பேச்சுக்களில் பல பரிசில்கள் பெற்ற இலக்கியவாதி என்ற வகையில் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமை தாங்குவதும் பொருத்தமான ஒன்றாகும்.
இம்மாநாடு நடைபெற வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வந்தவர் டொக்டர் கவிஞர் தாசிம் அஹமது அவர்கள் என்பதை அனைத்து இலக்கியவாதிகளும் நன்கு அறிவர். கடந்த வருடம் இது சம்பந்தமாக நீதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து அதற்காக இலக்கியவாதிகளை அழைப்பதில் முன்னின்று அவர் செயற்பட்டார் என்பதும் அனைவரும் அறிந்த விடயமாகும். அத்துடன் இது விடயங்களில் தனது சொந்தப்பணத்தை செலவிட்டதோடு தனது தொழிலையும் ஒதுக்கிவிட்டு இதற்காக பாடுபட்ட அவரை இலக்கிய மாநாட்டின் பொதுச்செயலாளராக நியமிக்காமல் விட்டதில் பாhய அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அத்துடன் இது விடயத்தில் அமைச்சரின் சகோதரர் ஒருவர்; தனது சகோதரர் தலைவர், அமைச்சர் என்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.
அமைச்சரின் சகோதரர் அமைச்சர் ஹக்கீம் மாநாட்டின் தலைவர் என்ற ஒரே காரணத்துக்காக நினைத்ததை எல்லாம் மாநாடு விடயத்தில் தலையீடு செய்வதற்கு அனுமதிக்க முடியாது என பல இலக்கியவாதிகள் எம்மிடம் முறையிட்டுள்ளனர். பொதுச்செயலாளராக டொக்டர் தாசிம் அஹமதே நியமிக்கப்படுவார் என அவரை எதிர் பார்க்க வைத்து அவர் மூலம் வேலைகளை பெற்றுவிட்டு இறுதியில் அவருக்கு அநியாயம் செய்யப்பட்டதாகவே எமக்குத் தெரிகிறது.
ஆகவே இது விடயத்தில் அமைச்சர் ரஊப் ஹக்கீம் நேரடியாக தலையிட்டு, முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சரின் உறவினர்கள் அல்லாத மூத்த இலக்கியவாதிகளையும் டொக்டர் தாசிம் அஹமது மற்றும் வாதியான எம்மையும் அழைத்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோருகிறோம். அநீதி எந்த இடத்தில் நடந்தாலும் அதனை தட்டிக்கேட்பது ஒரு முஸ்லிமின் தலையாய கடமை என செயற்படுபவர்கள் நாம் என்ற வகையில் இக்கோரிக்கையை உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் தலைவர் என்ற வகையில் அமைச்சர் ஹக்கீமிடம் முன் வைக்கிறோம் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.