எப்போதும் கலாசாரம் பண்பாடு என்று வரும் போது நம் நாட்டு பெண்களும், அவர்களது பொட்டும் தாலியும் உடைகளும் தான் அலசப்படுகின்றது. ஏன் நமது நாட்டு ஆண்களுக்கென்று கலாசாரம் பண்பாடு எதுவுமே இல்லையா?
ஆனால் பட்டிமன்றங்களும், பெண்களின் பொட்டும் தாலியும் உடையும்தான் விவாதத்திற்கான கரு என்று சொல்லிக் கதைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதையும் தாண்டிப் போவதானால் பெண்களின் மறுமணம் பற்றி பேசுவதில்லை. ஆண் மறுமணம் செய்வது கொள்வது அதிசயமான விடையமே இல்லையாம். மனைவி இறந்த வீட்டுக்குள்ளேயே அவனுக்கு மறுமணம் பேசி அவனது மனைவியின் தங்கையையோ, அல்லது உறவுப் பெண்ணையோ நிச்சயித்து விடுவார்கள். ஏனென்றால் அவன் ஒரு ஆணாம்.
ஆணுக்கு துணை தேவையாம். ஆனால் பெண்ணுக்கு மட்டும் கணவன் இறந்தவுடன் பொட்டை அழித்து, தாலியை கழற்றி, வெள்ளை சேலை உடுத்த வைத்து ‘இனி உனக்கு ஆசா பாசம் எதுவுமே வரக்கூடாது’ என்று சொல்லி மூலையில் தள்ளி விடுவார்கள்.
ஏனெனில் அவள் ஒரு பெண்ணாம் அவளுக்கு துணையே தேவை இல்லையாம். ஆசையே வரக் கூடாதாம்.
முதலில் எமது கலாசாரத்தில் பண்பாட்டில் புகுத்தப்பட்ட அடாவடிதனங்கள் களையப்பட்டு தேவையான நல்ல புதிய விடயங்கள் புகுத்தப்படவேண்டும். கொட்டும் பணியில் சேலை அணிவது நமது பண்பாடு என்று செல்லி சேலையுடன் செல்ல முடியுமா? அல்லது ஆண்களால் வேட்டியுடன் செல்ல முடியுமா? சில விடயங்கள் காலத்துக்கேற்ப, இடத்துக்கேற்ப மாறத்தான் வேண்டும் கலாசாரம் என்ற முறையில் கட்டிக் காக்க நம்மிடம் எத்தனையோ நல்ல விடயங்கள உள்ளன. அவைகளை கட்டி காப்போம். –தினக்குரல் 12.6.2013