இந்துக்கோயில்கள் தாக்கப்படுவதை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் நாட்டில் தொடர்ந்தும் மதஸ்தலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது கவலை தருகிறது என முஸ்லிம் மக்கள் கட்சியின் பிரதி தலைவர் மௌலவி அஸ்வர் பாக்கவி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அனைவரும் அனைத்து இடங்களுக்கும் செல்லலாம் என்ற சூழல் இருப்பதாக பெருமைப்படும் நாம் ஒரே இடத்தில் இருக்கும் மத ஸ்தலங்களுக்கு பாதுகாப்பில்லை என்பது நாட்டின் ஸ்திர தன்மையை கேள்விக்குட்படுத்தும் விடயமாகும்.
மக்கள் தமது அன்றாட பிரச்சினைகளுக்கு பரிகாரம் தேடவும், மன சாந்தி பெறவும் வணக்கஸ்தலங்கள் செல்கின்றனர். ஆனால் வணக்கஸ்தலங்களே தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படும் போது பொதுமக்கள் பாரிய மனச்சுமைகளுக்கு ஆளாகுகிறார்கள்.
எம்மை பொறுத்த வரை இந்த நாட்டில் உள்ள அனைத்து மத ஸ்தலங்களும் பாது காக்கப்பட வேண்டும் என்பதை தொதடராக கூறி வருகிறோம். மக்கள் தமது சமயங்களை பின்பற்றுவதோடு ஏனைய சமய ஸ்தலங்களுக்கும் பாதிப்பில்லாத போதுதான் நாட்டில் உண்மையான சமாதானம் நிலவுவதாக அர்த்தமாகும்.
இந்த வகையில் மட்டக்களப்பில் உள்ள இ;து ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை பெரிதும் கவலைக்குரியதாகவும் நாட்டுக்கு அவமதிப்பை ஏற்படுத்தவதுமாகும். நாட்டில் எந்தப்பள்ளி வாயலும் தாக்கப்படவில்லை என கூறிய அரசாங்கம் இதனையும் மறுக்கலாம். முஸ்லிம் பள்ளிவாயல் தாக்கப்படும் போது மௌனமாக இருந்த அரச சார்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகோதர இந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டதையாவது பாராளுமன்றத்தில் கண்டிக்க முன் வரவேண்டுமென முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
