வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதும் அரசியலில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுமாகும் என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனுக்கு முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தமிழ் பேசும் மக்களின் பாரிய எதிர் பார்ப்புகளைக் கொண்ட வட மாகாணத்துக்குரிய முதலமைச்சர் வேட்பாளருக்கான அனைத்து தகுதிகளும் த. தே கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு இருந்தும் அரசியலில் ஈடுபடாத முன்னாள் நீதியரசரை தெரிவு செய்துள்ளமை தமிழ் பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பு முணையாகும். அத்துடன் நீதித்துறையில் புகழ் பெற்ற திரு. விக்னேஸ்வரன் அவர்கள் அரசியல் ஒரு சாக்கடை என கூறிக்கொண்டு தனது சமூகத்தை மறந்து மக்களுக்கான சேவையிலிருந்து ஒதுங்கும் சுயநலமிக்க, கோழைத்தனமான முடிவை மேற்கொள்ளாது தேர்தல் வேட்பாளராவதை அவர் ஏற்றுக்கொண்டமை மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன் மூலம் புத்திஜீவிகளின் அரசியல் பிரவேசம் மூலம் மக்களுக்கான அரசியல் முன்னெடுக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. இத்தகைய ஒருவர் வட மாகாண சபை முதலமைச்சராக வருவதன் மூலம் அங்கு வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் என்பது முஸ்லிம் மக்கள் கட்சியின் எதிர் பார்ப்பாகும்.
கடந்த யுத்த காலத்தில் ஆயுதம் தாங்கியோரால் முஸ்லிம் சமூகம் பாரிய இன்னல்களை சந்தித்துள்ளது. இருந்த போதும் யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து தமிழ் பேசும் சமூகங்கள் இணைந்து தமது எதிர் காலத்தை உறுதி செய்து கொள்வது இன்றைய காலத்தின் தேவையாகும். அரசாங்கம் தமக்கு அனைத்து வசதிகளையும்; செய்து தரும் என நம்பிய முஸ்லிம் சமூகம் இன்று பாரிய நிர்க்கதிக்குள்ளாகியுள்ளது. தாம் நம்பிய முஸ்லிம் தலைமைகள் பதவிகளுக்காக அரசியடம் சோரம் போயும் தமக்கும் தமது பரம்பரைக்கும் அர்த்த புஷ்டியான நிம்மதியான வாழ்வை பெற்றுக்கொள்ள முடியாத நிலையை முஸ்லிம் சமூகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது.
வட மாகாண மக்கள் இந்த அரசுக்கு பெரிதும் ஆதரவளித்தும் அவர்களின் சுதந்திரமான மீள் குடியேற்றத்துக்கு கை கொடுக்காத நன்றி கெட்ட அரசை ஆதரித்ததற்காக இன்று முஸ்லிம்கள் வெட்கித்து நிற்கிறார்கள்.
ஆகவே திரு. விக்னேஸ்வரன் அவர்களின் தெரிவை நாம் வெகுவாக பாராட்டுவதுடன் அவரது பதவிக்காலத்தில் வட மாகாண முஸ்லிம்களும், தமிழர்களும் மனம் திறந்து நேரடி பேச்சுவாhத்தைகளுடன் ஈடுபடுவதுடன் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற வாழ்வுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்படும் என்பதும் எமது எதிர் பார்ப்பாகும் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
