சமீபத்தில் இந்தியாவின் பீகார் மாநிலம் புத்தகயாவிலுள்ள மகாபோதி; விகாரை மீது நடாத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளுக்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான முஜாஹிதீன் மீது இந்திய அரசு குற்றஞ்சாட்டியது.
அல் குவைதா மற்றும் தலிபான் அமைப்புகளுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ள அமைப்பு முஜாஹிதீன் தனது தாக்குதல் இலக்காக புத்தர் ஞானம் பெற்ற புனித பூமியான புத்தகயாவன் வரலாற்று பெருமை மிக்க மகாபோதி விகாரையை தெரிவுசெய்ய எது ஆதாரமாக இருந்தது என ஆராயப்பட்ட போது, மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்கள் நடாத்திய தாக்குதல்களுக்கு முஜாஹிதீன் மகா போதி விகாரை தாக்குதல் மூலம் பழிவாங்கியிருப்பது கண்டறியப்பட்டது. 75 சதவீத பௌத்தர்கள் பெரும்பான்மையினராக கொண்ட மியன்மாரில் முஸ்லிம்கள் மிகவும் சிறு பான்மையினர். பௌத்த தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலில் முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தனது சொந்த இடங்களில் இடம்பெயர்ந்தனர். மியன்மார் அரசு முஸ்லிம் சிறுபான்மை மக்களை பாதுகாக்க தவறியது. இதற்கு பௌத்தர்களுக்கு கிடைத்த பரிசு தான் மகாபோதி மீதான தொடர் குண்டு தாக்குதல்.
அல் குவைதா மற்றும் தலிபான் அமைப்புகள் மத்திய கிழக்கு நாடுகளிலும்; வட ஆபிரிக்கா நாடுகளிலும் கணிசமான அளவு வளர்ச்சியடைந்துள்ளன. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை விட உலகெங்கும் வாழும் முஸ்லிம் மக்களின் நலன் குறித்து இந்த அமைப்புக்கள் கவனம் செலுத்தி வருகின்றன. அடக்கி ஒடுக்கப்படும் உலக முஸ்லிம்களின் பாதுகாவலனாக இந்த அமைப்புகள் செயற்படுகின்றன.
இலங்கையில் அல் குவைதா, தலிபான் அமைப்புகள் கிடையா. இந்த அமைப்புகளுடன் தொடர்புள்ள இயக்கங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. முன்னைய ஆட்சிகாலங்களில் இந்த அமைப்புகள் இங்கு செயற்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால் இந்த தீவிரவாத அமைப்புக்களால் இலங்கைக்கு வருங்காலத்தில் பெரும் அச்சுருத்தல் ஏற்படலாம் என முதல் தடவையாக எச்சரிக்கை விடுககப்பட்டள்ளது. எச்சரிக்கை விடுத்தவர் சாதாரண ஆளும் அல்லர். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தான்.
கடந்த வாரம் கொழும்பு வந்து திரும்பிய சிவசங்கர் மேனன் ஜனாதிபதி தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர் மு. கா. தலைவர் உட்பட பலரை சந்தித்தார்.
பாதுகாப்பு செயளாலர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போது அல் குவைதா, தலிபான் தீவிரவாத அமைப்புக்களால் இலங்கைக்கு வருங்காலத்தில் பெரும் அச்சுருத்தல் ஏற்படலாம் என மேனன் எச்சரிக்கை விடுத்தார். இதுவரை விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரை கூறி இலங்கை அரசு ப+ச்சாண்டி காட்டி வந்தது. யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையிலும் வடக்கு கிழக்கில் பொருமளவு இராணுவத்தை குவித்து வைத்திருப்பதை நியாயப்படுத்த புலிகள் அமைப்பு தான் பயன்பட்டிருக்கிறது. மாகணசபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க மறுப்பதற்கும் புலிப் பூச்சாண்டி தான் காரணமாக கூறப்படுகின்றது. அல் குவைதா, தலிபான் அச்சுறுத்தல்கள் குறித்து
இலங்கையை எச்சரித்த சிவசங்கர் மேனன் புலிகள் அமைப்பு இனி இலங்கையில் தலைதூ}க்காது என்று உறுதியாக தெரிவித்து விட்டார். இது இலங்கையில் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இந்தியாவை பொறுத்தமட்டில் புலிப் பூச்சாண்டி இனி எடுபடாது.
மேனனின் எச்சரிக்கை சரியாக இருக்குமானால் ஒரு தீவிரவாத அமைப்பு அழிந்து போக மற்றொரு தீவிரவாத அமைப்பு உருவாவது இலங்கைக்கு ஒரு சவாலாகும். தமிழ் மக்கள் நசுக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்ட சமயம் சமாதான முயற்சிகள் அற்று போன நிலையில் புலிகள் இயக்கம் தோன்றியது.
அல்குவைதா, தலிபான் அமைப்புக்கள் இலங்கையில் தலையிடும் என்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் இந்த நாட்டு முஸ்லிம்களை பாதுகாக்க தவறிய அரசு மீதே சாரும்.
இலங்கையில் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன. முஸ்லிம் பெண்கள் தமது மத கலாசாரத்துக்கு ஏற்ப உடை அணிய கூடாது என அச்சுறுத்துகின்றனர். கடந்த வியாழன் இரவு மஹியங்கனை பள்ளிவாசல் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிககத்தக்கது. புனித ரமழான் மாத இராக்கால வணக்கமான தராவீஹ் தொழுகை முடிவடைந்ததும் பள்ளிவாசல் மீது நடாத்தப்பட்ட கல் வீச்சில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன். இஸ்லாத்தில் அருவறுக்கத்தக்க பொருளான பன்றி இறைச்சியும் பள்ளவாசலுக்குள் வீசப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள்மீது தாக்குதலில் இது மோசமான ஒன்றாகும். அதுவும் புனித ரமழான் மாதத்தில் இடம்பெற்றுள்ளது. இனவாத கும்பல்களின் இத்தாக்குதல் குறித்து இனியாவது அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மேனன் கூறியது போல் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளினால் இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுமானால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும்.
-சுடர் ஒளி ஆசிரியர் தலையங்கம். 15.7.203
