தேசிய சூறா சபைக்காக முயற்சி செய்தவர்கள் திடீரென தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் குதித்துள்ளமை மூலம் தேசிய சூறா சபைக்கான முயற்சி என்பது வெறுமனே முஸ்லிம் மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கை என எமது கட்சி கூறியது இன்று உண்மையாகியுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சியின் பிரதி தலைவர் மௌலவி அஸ்வர் பாக்கவி கூறினார்.
கொழும்பு தாருள் குர்ஆனில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு அவர் கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை முஸ்லிம்கள் தங்களது சுய நல அரசியல்வாதிகளினால் மிக மோசமாக ஏமாற்றப்பட்ட சூழ்நிலையில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கையாலாகாதவர்கள் என்று தெரிந்து கொண்டே இத்தகைய ஏமாற்று அரசியல்வாதிகளின் வார்த்தைகளுக்கு ஏமாந்து வாக்களித்து விட்டு ஏமாந்து விட்டோமே என கூறுவதை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது.
கடந்த காலத்தில் இனவாதிகளால் ஏற்பட்ட ஹலால், அபாயா, பள்ளிவாயல் உடைப்பு விடயங்களில் முஸ்லிம் அதிகாரா அரசியல்வாதிகளின் சாயம் வெளுத்து விட்டது. பதவிகளுக்கு அடிமையாகியுள்ள அரசியல்வாதிகளால் சமூகத்துக்காக சுதந்திரமாக குரல் கொடுக்க முடியாது என்பது உணரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசியல் சார்பற்ற தேசிய ஆலோசனை (சூறா) சபை ஒன்றை அமைப்பதின் மூலம் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தேசிய மட்டத்தில் ஆலோசித்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமென சிலர் கூட்டங்களை நடத்தினர். உலமா சபையுடன் இணைந்ததாக இது செயற்படும் என்று அறிக்கைக்கு மேல் அறிக்கைகளை விட்டனர். இவ்வாறு ஆலோசனை சபை அமைப்பதில் தீவிரமாக இருந்தவர்கள் திடுதிப்பென தமிழ் கூட்டமைப்பை சந்தித்து அவர்களுடன் தேர்தல் கூட்டு செய்து கொண்டதன் மூலம் இவர்களது தேசிய சூறா சபை என்ற சிந்தனையின் கபடத்தனம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தங்களது சொந்த அரசியல் நலன்களுக்காகவே இவர்கள் தேசிய சூறா சபை என மக்களை பிழையாக வழிநடத்தியுள்ளார்கள் என்பது தெளிவாகியுள்ளது.
எம்மை பொறுத்த வரை உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சி மூலம் மட்டுமே இந்த நாட்டு முஸ்லிம்களின் உரிமைகளை வெல்ல முடியும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளவர்கள். அந்தக் கருத்தை வெறுமனே ஒரு கருத்தாக வைத்துக்கொண்டிராமல் செயலிலும் காட்டி வருபவர்கள். அதனை விடுத்து இத்தகைய சூறா சபைகள் என்பதெல்லாம் தெரிந்து கொண்டே செய்யும் ஏமாற்று வேலைகள் என்பதை எமது கட்சித் தலைவர் முபாறக் மௌலவி அவர்கள் இது சம்பந்தமாக இவர்களால் நடத்தப்பட்ட கூட்டங்களில் பகிரங்கமாக, துணிச்சலுடன் தெரிவித்து வந்துள்ளார். அவரது கருத்து இன்று உண்மையாகியுள்ளது.
