BREAKING NEWS

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடாமல் தனித்துப்போட்டியிடுவதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான கட்சி


முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடாமல் தனித்துப்போட்டியிடுவதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான கட்சி
என்பது போல் காட்ட முனைவது சுத்த ஏமாற்று வேலை என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிக்காக சோரம் போன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்குத்தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டால் அரசை எதிர்க்கும் தமிழ் மக்கள் இதனை விரும்ப மாட்டார்கள் என முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த சிலர் வேதாந்தம் பேசுவது  தமிழ் மக்களை தங்களது ஆதரவாளர்கள் போல் ஏமாளிகள் என்ற எண்ணத்தின் அடிப்படையிலாகும். இத்தகைய ஏமாற்று வார்த்தைகள் முஸ்லிம் சமூகத்திடம் மட்டும்தான் விலை போகும்.

அரசாங்கத்தின் அமைச்சுப்பதவியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி தனித்து போட்டியிடுவதும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதும் ஒன்றுதான் என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தெரிந்த விடயம். இதனை நன்கு தெரிந்துதான் ஈபிடிபி போன்ற கட்சிகள் தனித்து போட்டியிடாமல் அரசுடன் இணைந்து போட்டியிடுகின்றன.

அமைச்சராக இருந்து கொண்டே தனித்து போட்டியிட்டால் அரசுக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பெறலாம் என்று இருக்குமாயின் நிச்சயம் ஈ பி டி பி தனித்து போட்டியிட்டிருக்கும். அரசும் அதற்கு தாராளமாக இடம் கொடுத்திருக்கும். ஆனால் இந்த ஏமாற்று வேலைகள் தமிழ் மக்களிடம் செல்லாது என்பதை தெரிந்துதான் அக்கட்சி அரசுடன் இணைந்து போட்டியிடுகிறது.

ஆனால் முஸ்லிம் மக்கள்தான் அரசியலை தமது அறிவு கொண்டு பார்ப்பதை விட உணர்வின் மூலம் பார்ப்பதனால் இந்த ஏமாற்ற வார்த்தைகளுக்கு மிக சீக்கிரமாகவே அடிமையாகிப் போய் விடுகிறார்கள். கடந்த கிழக்கு மாகாண தேர்தலிலும் இதே ஏமாற்று வேலை செய்து தேர்தல் முடிந்ததும் என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் அது அரசாங்கத்துக்கு எதிரான கட்சி என ஒரு முஸ்லிம் நினைத்தால் அவனைப்போன்ற முட்டாள் உலகில் இருக்க முடியாது. கடந்த கிழக்கு மாகாண தேர்தலில் அமைச்சர் வீரவம்சவின் கட்சி திருகோணமலையில் தனித்து போட்டியிட்டது. இதன் மூலம் அக்கட்சி அரசுக்கு எதிரான கட்சி என்றா மக்கள் நினைத்தார்கள்? அதே போல் அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் கட்சியும் தனித்து போட்டியிட்டது.

ஆக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதன் மூலம் தாம் அரசுடன் இல்லாதவர்கள் என்ற மாயையை ஏற்படுத்துவது அப்பாவி முஸ்லிம் மக்களை ஏமாற்றும் மோசமான நடவடிக்கையாகும். இத்தகைய ஏமாற்று அரசியலுக்கு முஸ்லிம்கள் முடிவு கட்ட முயலாத வரை சிலரின் பகட்டுக்காக தொடர்ந்தும் சமூகம் ஏமாறும் நிலைதான் தொடரும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar