மத்திய மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சி அமைக்கும் என்பதால் மக்களின் வாக்குகளை சிதைத்து ஆளுங்கட்சியை வெல்ல வைப்பதற்காகவே ஹக்கீம், ஸ்ரீரங்கா, திகாம்பரம் போன்றவர்கள் தனியாக களமிறக்கப்பட்டுள்ளார்கள் என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார். கம்பளையிலிருந்து கலந்து கொண்ட கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது,
இன்று முஸ்லிம், தமிழ் சமூகங்கள் பாரிய அவமானங்களை சந்தித்த நிலையில் வெட்கித்தலைகுணிந்தவர்களாக வாழ்கின்றனர். இந்த அநியாயங்களுக்கு விடிவு கிடைக்காதா என்று ஏங்கிய நிலையில் ஐ தே க வுக்கு வாக்களிப்பதன் மூலமே தாம் இத்தகைய அநியாயங்களை எதிர்க்கிறோம் என்பதை உலகறியச்செய்ய முடியும் என்பதை புரிந்து வைத்துள்ளார்கள். இதனை அரசாங்கமும் நன்றாக புரிந்துள்ளதனால்த்தான் முஸ்லிம் தமிழ் வாக்குகள் யானைக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக தனது எட்டப்பர்களை தனியாக களமிறக்கியுள்ளது. இந்த எட்டப்பர்கள் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் அக்கறை கொண்டவர்கள் போல் காட்டிக்கொண்டு இச்சமூகங்களின் தன்மானத்தை கப்பலேற்ற வந்துள்ளார்கள்.
ஹக்கீம் அமைச்சராக இருந்து கொண்டே அரச வளங்களை பயன் படுத்தி பிரச்சாரம் செய்கின்றார் என்றால் இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பதை மிக இலகுவாக புரிந்து கொள்ளலாம். ஆரசில் இருந்து கொண்டு மு. காவுக்காக பிரச்சாரம் செய்ய மாட்டேன் என அறிக்கை விட்ட பசீர் சேகு தாவுத் கண்டிக்குப்போய் அக்கட்சிக்கு பிரச்சாரம் செய்கின்றார் என்றால் இதற்கு யாரின் ஆசீர் வாதம் உண்டு என்பதை சின்னப்பிள்ளைக்கும் புரியும்.
அதே போல் ஸ்ரீ ரங்காவும் அரசுக்கு ஆதரவானவர். 18 வது திருத்த சட்டத்துக்கு ஆதரவாக அரசுக்கு வாக்களித்தவர். தொலைக்காட்சியில் முஸ்லிம் காங்கிரசை பலமாக குற்றம் சாட்டும் இவர் தனது ஆட்களை மத்தியில் முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட வைத்துள்ளார் என்றால் இதன் பின்னால் எத்தகைய பாரிய மொசாட் திட்டம் அரங்கேறுகிறது என்பதை மிக இலகுவாக புரிந்து கொள்ளலாம். அதே போல்தான் திகாம்பரமும், பிரபா கனேசனும் அமைச்சுப்பதவி ஒன்றை எதிர் பார்த்து அரசுக்கு தனது விசுவாசத்தை காட்டுவதற்காக அரசுடன் இணைந்து போட்டியிட்டு ஐ தே கட்சிக்கான வாக்குகளை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் இவர்களெல்லாம் பாராளுமன்றம் சென்றது மலையக மக்கள் மத்தியில் அபிமானத்தை பெற்றிருந்த ஐ தே கவின் யானைச்சின்னத்தில் போட்டியிட்டதனால்த்தான். இவ்வாறு உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்து விட்டு இன்று அந்தக்கட்சிக்கு மட்டுமல்ல தமது மக்களுக்கே எட்டப்பன் வேலைகளை செய்கிறார்கள்.
இத்தகைய தந்திரங்களை மத்திய மற்றும் வட மேல் மாகாண தமிழ் பேசும் மக்கள் புரிந்து கொள்ளத்தவறினால் அவர்களின் எதிர் காலம் மிக மோசமாகி விடும் என்பதனால்த்தான் நாம் இம்மக்களுக்கு சரியான அரசியல் வழிகாட்டலை செய்து கொண்டிருக்கிறோம். இந்தத்தேர்தலை பயன்படுத்தி இத்தகைய எட்டப்பர்களின் வேட்பாளர்களை தோற்கடிப்பதன் மூலம் மட்டுமே தமிழ் பேசும் மத்திய மாகாண மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள் என்பதும் தமது மதஸ்தலங்களுக்கெதிரான நடவடிக்கைகளை எதிர்க்கிறோம் என்றும் அர்த்தமாகும். அவ்வாறில்லாமல் இந்த எட்டப்பர்களின் ஏமாற்று வார்த்தைகளுக்கு மயங்கி இவர்களின் கட்சிகளுக்கு வாக்களித்தால் இன்னும் பல பள்ளிவாயல் உடைப்புக்கு மக்கள் ஆணை வழங்கியதாகவே முடியும் என்பதுடன் இன்னும் பல காலங்களுக்கு இந்த நாட்டில் நாம் ஒப்பாரி வைக்க வேண்டி வரும்.
