BREAKING NEWS

தமிழ் மக்களின் அரசுக்கு ஆதரவான கட்சிகளும் எதிரான கட்சிகளும் ஒன்று சேரவில்லை என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.


தமிழ் மக்கள் தேர்தலில் ஒன்று பட்டுள்ளார்கள். அது போல் நாமும் ஒன்றுபட வேண்டும் என முஸ்லிம் பொதுமக்களும் ஏன் அரசியல்வாதிகளும் கூட பேசிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அடிக்கடி முஸ்லிம் சமூகம் தமிழ் சமூகத்தை பார்த்தே சூடு போட்டுக்கொள்வதையும் அதனைக்கூட புரியாமல் தப்பாக சூடு போடுவதும்தான் வேடிக்கையானது.
ஒரு விடயத்தை முஸ்லிம் சமூகம் மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் இரண்டு அரசியல் வழி முறைகள் உள்ளன. ஒன்று அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்து பிழைப்பு நடத்துவது. இரண்டு அரசாங்கத்தை எதிர்த்து தமது சமூகத்தின் தன்மானத்துக்காக அரசியல் செய்வது. இது இரண்டுமே தமிழ் சமூகத்தில் இருந்தாலும் படித்தவன் முதல் பாமரன் வரை பெரும்பாலும் அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் தன்மான அரசியலையே ஆதரிக்கின்றான் என்பதை நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல் புலப்படுத்துகிறது. இந்த நிலையில் முஸ்லிம் சமூகம் தமிழர்களைப்போல் ஒற்றுமைப்பட வேண்டும் என்றால் அரசின் எலும்புத்துண்டை சுவைக்கும்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அ. இ. முஸ்லிம் காங்கிரஸ், அதாவுள்ளா காங்கிரஸ், மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றை முஸ்லிம் சமூகம் ஒதுக்கி விட்டு அரசுக்கு எதிரான முஸ்லிம் கட்சிகளை வளர்க்க முன் வரவேண்டும். இதற்கு முஸ்லிம் புத்திஜீவிகள், பொதுமக்கள் தயாரா என்பதுதான் பலத்த கேள்வி.

தமிழ் மக்களின் அரசுக்கு ஆதரவான கட்சிகளும் எதிரான கட்சிகளும் ஒன்று சேரவில்லை என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் அமைச்சர்மார் கட்சிகளும், ஏனைய கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என கூறுவது அறிவார்ந்த கருத்தாகாது.  இலக்குகள் வித்தியாசப்பட்ட கட்சிகள் ஒன்று சேர்வது என்பது முடியாத ஒன்றாகும். ஆக முஸ்லிம் கட்சிகளும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் ஒன்றிணைவது என்பது தமிழ் மக்களின் எடுத்துக்காட்டு அல்ல. மாறாக சராசரி இலங்கை முஸ்லிம் பொதுமகனின் சுயநலத்தில் எழுந்த சிந்தனையாகும். இவ்வாறு ஒரு கூட்டு ஏற்பட்டால் சமூகத்தின் உரிமைப்போராட்டத்துக்கு பதிலாக அங்கும் எலும்புத்துண்டுகளுக்கான சண்டைகளைத்தான் காண முடியும்.

ஆகவே முஸ்லிம் சமூகம் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களையும், அவர்களின் கட்சிகளையும் குப்பைத்தொட்டியில் போடுவதற்கு முன் வராமல் தமிழர்களைப்போன்று நாமும் ஒற்றுமைப்பட வேண்டும் என கூறுவது அர்த்தமற்றதாகும். தமிழ் மக்கள் அரச சார் கட்சிகளை குப்பையில் மட்டுமல்ல சாக்கடைக்குள் வீசி விட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்னமும் ஏமாற்று அமைச்சர்களைக்கண்டால் மாலை போட்டு பள் இளிக்கும் முஸ்லிம்களே 99 வீதம் உள்ளார்கள் என்பதுதான் பலத்த உண்மையாகும். ஆகவே அரச சார்பில்லாத கட்சிகளின் பின்னால் அணி திரள முஸ்லிம் சமூகம் தயாரில்லை என்றால் தொடர்ந்தும் அவமானப்பட்டுக்கொண்டே இருப்பது தவிர வேற வழி இல்லை.
-முபாறக் அப்துல் மஜீத்
 தலைவர்
முஸ்லிம் மக்கள் கட்சி
(நேற்று இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் பேசியவை)

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar