BREAKING NEWS

புல்மோட்டை பிரதேச பூர்வீக காணிகள் விடயத்தில் இலவசமாக வாதாடிய சட்டத்தரணிகளுக்கு முஸ்லிம் மக்கள் கட்சி பாராட்டு

அரசியல் சட்டத்தரணிகள் உறங்கிக்கொண்டிருக்கும் போது புல்மோட்டை பிரதேச பூர்வீக காணிகள் விடயத்தில் இலவசமாக வாதாடிய சட்டத்தரணிகளுக்கு முஸ்லிம் மக்கள் கட்சி பாராட்டு தெரிவிப்பதுடன் இதனை முன்னுதாரணமாக வைத்து ஏனைய சமூக விடயங்களிலும் சட்ட உதவிக்கு முஸ்லிம் அரசியல் சட்டத்தரணிகள் முன் வர வேண்டும்
என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவித்ததாவது,

புல்மோட்டை 14ம் கட்டையில் நில அளவையாளர்களினால் மக்களின் காணிகள் அளவிடப்பட்ட போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதிகள் தரப்பில் சட்டத்தரணிகள் அனைவரும் இலவசமாக வாதாடியுள்ளார்கள். இத்தனைக்கும் இது விடயத்தில் பிரதி வாதியாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அன்வரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். அவரது கட்சியின் தலைவர் ஒரு உயர் சட்டத்தரணி. செயலாளரும் ஒரு சட்டத்தரணி. பிரதி செயலாளரும் சட்டத்தரணி. இது போல் அக்கட்சியில் நிறைய சட்டத்தரணிகள் மலிவாகக்கிடக்கிறார்கள்.

இருந்தும் கூட இது போன்ற சமூக விடயங்களில் அக்கட்சியினர் சட்டத்தை நாடாமல் இருப்பதன் மூலம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதை விடுத்து அவற்றை வைத்து தமது அரசியல் பிழைப்பு நடத்துவதாகவே தெரிகிறது. இந்த நாட்டில் 26 பள்ளிகள் உடைக்கப்பட்டும் அதற்கெதிராக ஒரு வழக்கையேனும் இக்கட்சியினர் இதுவரை தாக்கல் செய்யவில்லை. அதே போல் அ. இ. முஸ்லிம் காங்கிரசின் செயலாளர், தவிசாளர், மற்றும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என சட்டத்தரணிகள் அங்கும் மலிவாக உள்ளனர். ஆனால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு சட்டத்தை நாட மட்டும் இவர்களால் முடியவில்லை. மாறாக பத்திரிகை அறிக்கை விடுவதில் மட்டுமே வல்லவர்களாக இருக்கிறார்கள்.

தமது மாகாண சபை உறுப்பினருக்கு ஆதரவாகவும், கிழக்கு முஸ்லிம்கள் நிலங்கள் பறிப்புக்கு எதிராகவும் நீதி மன்றத்தில் பேசுவதற்கு தமது உயர் சட்டத்தரணிகளை அனுப்ப முடியாத இத்தகைய கட்சிகள் சாதாரண முஸ்லிம்கள் விடயத்தில் ஒரு போதும் அக்கறை கொள்ளாது என்பதை புத்தியுள்ள எவரும் புரிந்து கொள்வர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar