BREAKING NEWS

இன்றைய முஸ்லிம் முரசில் வெளி வந்துள்ள கட்டுரை ஹஜ்- உலகளாவிய முஸ்லிம்களின் ஒற்றுமை


ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியானதாகும் என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துள்ளோம். உலகில் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளும் முஸ்லிமாகவே பிறக்கின்றன என்ப
து இஸ்லாத்தின் அடிப்படை தத்துவமாகும். இவ்வாறு பிறக்கின்ற குழந்தை வளர்ந்ததும் அதன் பெற்றோர் எந்த சமயத்தில் இருக்கிறார்களோ அந்த சமயத்தை சேர்ந்ததாக ஆகி விடுகிறது. இதனை நபியவர்களின் வார்த்தையும் தெளிவாக நமக்குச்சொல்கிறது.

இவ்வாறு முஸ்லிமாக பிறந்த ஒரு மனிதன் பருவம் அடைந்ததும் வணங்கப்படுவதற்குரியவன் ஓரிறைவன் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் முஹம்மது நபியவர்கள் இறைவனின் இறுதி தூதர் என்றும் ஏற்று கூறுவானாகில் அவன் தொடர்ந்தும் முஸ்லிமாக இருக்கின்றான். இதனை மறுத்தால் அவன் இறை மறுப்பாளனாக ஆகி விடுகிறான். இந்த விடயம்தான் இஸ்லாத்தின் முதற் கடமையாகும். இந்த அடிப்படை இல்லாமல் அதன் பின்னரான கடமைகள் எதுவும் அவனுக்கு கடமையாக மாட்டா. இதனை நாம் கலிமா ஷஹாதா என்கிறோம்.
அதற்குப்பின் தொழுகை நோன்பு, ஸக்காத், ஹஜ் ஆகிய கடமைகள் ஒரு முஸ்லிம் மீது கடமையாகின்றன. ஆனாலும் இவற்றில் அனைத்து முஸ்லிம்களுக்குமான கடமை ஒரு பிரிவுக்கான கடமை என இரண்டாக வகுக்கப்படுவதன் மூலம் இஸ்லாம் மனிதர்களுக்கு மிக எளிதாகவே கடமைகளை தந்துள்ளது.
நோன்பு என்பது அனைவருக்கும் கடமையாக இருக்கும் அதே வேளை ஸக்காத் என்பது பொருளாதாராத்தில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருந்தாலேயே ஸக்காத் கடமையாக உள்ளது. அதே போல் ஹஜ் என்பதும் மக்காவுக்கு சென்று வர பணம், மற்றும் உடல் ஆரோக்கிய வசதி கொண்ட ஒருவருக்கே கடமையாகின்றது.

இறைவன் நபி இப்றாகீமை நோக்கி ஹஜ்ஜுக்காக வரும் படி நீர் மனிதர்களுக்கு அறிவிப்பீராக என கூறியதாக அல்குர்ஆன் கூறுகிறது. நபி இப்றாகீம் அவர்கள் மூவாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மூசா நபிக்கு முன் அதாவது இற்றைக்கு ஐயாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த இறை தூதர்.
இவர் இறைவன் உத்தரவு கொண்டு கஃபாவை மீளக்கட்டியெழுப்பி அதன் அருகே தனது வம்சத்தையும் வாழ வைத்தார். அப்போது அந்தப்ப+மி தண்ணீர் இல்லாத வறண்ட பாலைவனமாக, மக்கள் குடியிருப்பற்ற நிலமாக இருந்தது. இந்த ஊருக்கு ஹஜ் செய்வதற்காக வரும்படி மனிதர்களுக்கு அறிவிக்கும் படி இறைவனால் சொல்லப்பட்ட போது சாதாரண மனிதன் என்றால் இது சாத்தியமா என்றுதான் கேட்டிருப்பான். ஒட்டகம், கழுதை, குதிரை, மாடு தவிர வேறு பிரயாண வாகனங்கள் இல்லாத அந்தக்காலத்தில் பல்லாயிரம் மைல்கள் தாண்டி வர வேண்டுமென்றால் இது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனாலும் இறைவனின் கட்டளையை ஏற்று, அவன் நினைத்தால் அனைத்தையும் நடத்திக்காட்ட சக்தியுள்ளவன் என்பதை உறுதியாக புரிந்து ஹஜ்ஜுக்கு வரும்படி நபி இப்றாகீம் அவர்கள் மனிதர்களுக்கு அறிவித்தார். அதே போல் நபி இப்றாகீம் அவர்கள் மக்கா ப+மியை பாதுகாப்பான, உணவு, மற்றும் கனிவர்க்கங்கள் கிடைக்கும் ப+மியாக ஆக்கும்படியும் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். இறைவனும் அது போன்றே அதனை இன்று ஆக்கினான்.

இப்றாகீம் நபிக்குப்பின் சுமார் நான்காயிரம் வருடங்களுக்குப்பின் வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இப்றாகீம் நபியவர்கள் எவ்வாறு ஹஜ் செய்தார்களோ அவ்வாறு ஹஜ் செய்து காட்டினார்கள். ஹஜ்ஜுடைய அனைத்து கிரியைகளிலும் நபி இப்றாகீமுடைய அடையாளங்களை நினைவு படுத்திக்காட்டினார்கள்.
ஹஜ்ஜுக்கு செல்லும் ஒருவர் இரண்டு தைக்காத வெள்ளைத்துணிகளை அணிந்து கொண்டு முதலில் கஃபாவை சுற்றி ஏழு தவாப்கள் செய்வார். இதனை இப்றாகீம் நபியவர்கள் செய்திருந்தார்கள். அதன் பின் மகாம இப்றாகீம் எனும் இப்றாகீம் நபியவர்கள் நின்ற இடத்தில் இரண்டு ரக்அத் தொழுவார். அதன் பின் சபா மர்வா எனும் இடத்தில் ஏழு முறை மெதுவாக ஓட வேண்டும். இப்றாகீம் நபியின் மகன் இஸ்மாயில் குழந்தையாக இருக்கும் போது தண்ணீர் தவிப்பில் அலறியதற்காக தண்ணீர் கிடைக்காதா என அன்னை ஹாஜரா பரிதவித்த காட்சி அங்கு நமக்கு நினைவு வருகிறது.
அதன் பின் பிறை 8ல் மினாவுக்கு செல்தல் 9ல் அரபா செல்தல் 10ல் மீண்டும் மினா வந்து மூன்று நாட்கள் தங்கி; இப்றாகீம் நபியை சைத்தான் ஏமாற்ற முயற்சித்த இடத்தில் கல் எறிதல் தலையை மொட்டையடித்துக்கொள்ளுதல் அதன் பின் மீண்டும் மக்கா வந்து தவாப் செய்தல் என்பதுடன் ஹஜ் நிறைவேறுகிறது.

ஹஜ்ஜுடைய வரலாறு என்பது நமக்கு பல கூர்மையான விடயங்களை ஆதாரப+ர்வமாக சுட்டிக்காட்டுகிறது. அதாவது இஸ்லாம், முஸ்லிம்கள் என்பது பலரும் நினைப்பது போல் ஆயிரம் வருட வரலாறு கொண்டதல்ல. மாறாக இந்த உலகம் தோன்றியது முதல் இஸ்லாமும் முஸ்லிம்களும் இந்த உலகில் வாழ்கின்றார்கள். இந்த வரிசையில் இப்றாகீம் நபியவர்கள் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் ஒரு உண்மையான முஸ்லிமாக அவர் வாழ்ந்ததாக குர்ஆன் கூறுகிறது.
அதே போல் முஹம்மது நபியவர்கள் அன ஃபீ மில்லத்தி இப்றாகீம் என கூறினார்கள். அதாவது நான் இப்றாஹீம் நபியின் மார்க்கத்தில் இருக்கிறேன் என கூறினார்கள். இப்றாகீம் நபியின் மாhக்கமே இஸ்லாம். அந்த இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் முஸ்லிம்கள். ஆக முஸ்லிம்களின் மிக சமீபத்திய வரலாறு என்று பார்த்தால் கூட நமது வரலாறு என்பது ஐயாயிரம் வருடங்களுக்கு மேலாகிறது. இது ய+த, கிறிஸ்தவ, பௌத்த, இந்து மத வரலாற்றுக்கு முற்பட்டதாகும்.
அதே போல் அனைவரும் வெள்ளாடையுடன் இருப்பது என்பது தேசம், நிறம், மொழி என்பதற்கெல்லாம் அப்பாற்பட்ட உலகளாவிய ஒற்றுமையை காட்டுகிறது. ஒரு உண்மையான முஸ்லிம் அடுத்த முஸ்லிமை சக முஸ்லிமாகவே பார்க்க கடமைப்பட்டுள்ளானே தவிர அவனது மொழிக்கோ, நிறத்துக்கொ எந்த அந்தஸ்தையும் வழங்க மாட்டான். இத்தகைய ஒற்றுமையை ஹஜ் நமக்கு சொல்கிறது.

அதே போல் பிறை 9ல் அரபா மைதானத்தில் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இறைவன் ஒருவனைப்பற்றியே புகழ் கூறுவதை பார்க்கும் போது உள்ளமெல்லாம் ப+ரிக்கும். அத்தகைய அரபா நாளில் அதாவது அரபா நாளில் ஹாஜிகள் ஒன்று கூடும் நாளில் நோன்பு நோற்பதை ஏனைய முஸ்லிம்களுக்கு நபியவர்கள் சுன்னத்தாக காட்டியதன் மூலம் நமது உள்ளங்களும் ஹாஜிகளுடன் இணைந்து மானசீகமாக அவர்களுடன் பின்னிப்பிணைந்துள்ளோம் என்பதை காட்டுகிறது.
நபியவர்களின் காலத்தில் மக்காவில் துல் ஹஜ் பிறை காணப்பட்ட செய்தி ஏனைய உலக நாடுகளுக்கு உடனடியாக தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாத காரணத்தால் அவரவருக்கு முடியுமான எல்லைக்குள் பிறை கண்டு அரபா நாளை தீர்மானித்துக்கொள்ளலாம் என நபியவர்கள் கற்றுத்தந்தள்ளார்கள். நபியவர்களின் வார்த்தைகள் எக்காலத்துக்கும் உதவும் என்பதற்கிணங்க தற்காலத்தில் மக்காவில் துல் ஹஜ் பிறை தெண்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் அடுத்த வினாடியே உலகம் முழுவதும் அது தெரிந்து விடுகிறது. இதன் படி அறபா நாள் எப்போது என்பது எட்டு நாட்;களுக்கு முன்னரே நமக்கு தெரிந்து விடுகிறது. ஆகவே அரபாவில் ஹாஜிகள் கூடும் அரபா நாளில் நாம் நோன்பு வைக்க வேண்டுமே தவிர இலங்கையில் உள்ளவர்கள் பிறை கண்டு அரபா தினத்தை அறிவித்து அது ஹாஜிகள் அறபாவில் ஒன்று சேரும் தினம் அல்லாத வேறு தினமாக இருந்தால் அதனை ஏற்று நோன்பு பிடிப்பது இஸ்லாத்துக்கு முரண்பட்டதும் இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கமில்லை என கூறுவது போன்றதுமாகும்.
ஆகவே மக்காவில் அரபா மைதானத்தில் ஹாஜிகள் கூடும் தினத்தில் நாம் நோன்பு பிடிப்பதுடன் அதற்கு மறு நாளை ஹஜ் பெருநாளாக கொண்டாடவும் முயற்சி செய்வதன் மூலம் இஸ்லாம் எக்காலத்துக்கும் எற்றது என்பதை பறை சாற்றுவோம்.
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
அகில இலங்கை உலமா கவுன்சில்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar