-ஐ. ஏ. காதீர்கான்
“வெளிநாட்டு முதலீடுகளை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், இங்கு நம்பிக்கையுடன் முதலீடு செய்ய முன் வருமாறு முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா
துருக்கியில் இடம்பெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அழைப்பு விடுத்துள்ளார். துருக்கி இராஜியத்தில், இஸ்மீர் நகரில், 82 ஆவது வருடமாக இடம்பெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கலந்துகொள்ளும் 62 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன், இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாக கலந்துரையாடும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிக்கையில்
‘’இலங்கையின் அடிப்படை வசதிகள் யாவும் உயர்மட்டத்தை நோக்கி, அதிவேகமாக அபிவிருத்தியடைந்து வருகிறது. முதலீடு சம்பந்தமாக தெளிவான திட்டங்களையும், சட்ட வரையறைகளையும் முதலீடு தொடர்பாக உங்களை கவரும் மற்றும் ஊக்கப்படுத்தும் திட்டங்கள் பலவற்றையும் நிலைப்படுத்தியுள்ளோம். நாம் துருக்கி இராஜியத்துக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது இதற்காகவே.
இலங்கை இன்று அபிவிருத்தி இலக்கை நோக்கி அதிவேகமாக பயணிக்கின்றது. இது எமக்கும் நண்பர்களான நீங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பெரும் மகழ்ச்சியை அளிக்கிறது. இதனால் நம் அனைவருக்கும் நிறையவே முதலீடும் சந்தர்ப்பங்கள் கிட்டியுள்ளன.
இலங்கையின் எதிர்காலம் நாம் நினைத்ததை விடவும் மிகச் சிறப்பாக உள்ளது. இதேபோல், உங்கள் அனைவரினதும் எதிர்காலமும், நீங்கள் எண்ணியதை விடவும் அதிசிறப்பு வாய்ந்ததாக இருப்பதை நான் காண்கிறேன்.
இதன் ஊடாக எமக்கும் உங்களுடைய நாடுகளுக்கிடையில் பொருளாதார வர்த்தகத் துறையை, எதிர்காலத்தில் உயர்மட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் உங்களுக்கும் எனக்கும் திடைத்துள்ளது.
உள்நாட்டு முதலீடு சிறந்தது எனினும் வெளிநாட்டு முதலீடுகளும் எமக்கு கிடைக்குமானால் இது அதை விடவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமையும். வெளிநாடுகளுடன் ஒன்றிணைந்த முதலீடுகள் தொடர்பாக இலங்கை நாட்டின் கதவுகள் என்றும் திறந்தே உள்ளன.
முதலீடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் ஆரம்பம் முதல் இறுதிவரைக்கும் என்றும் உங்களுடனும், உங்கள் நாடுகளுடனும் நம்பிக்கையாகவும் நாணயமாகவும் கைகோர்த்து நிற்போம் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
