ஹஜ்ஜுப் பெருநாள் போதிக்கின்ற நல்லெண்ணங்களை
நமது வாழ்வில் கடைப்பிடிப்போமாக!
-பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா
இன்று தியாகத் திருநாள்- ஹஜ்ஜுப் பெருநாள். தியாகங்களை அதிகளவில் செய்யக்கூடிய நன்நாள். தந்தை நபி இப்றாஹீம் (அலை) – தனயன் நபி இஸ்மாஈல் (அலை) ஆகிய இருவரின் தியாக வரலாற்றை நினைவு கூரும் உயரிய நாள். இன்றைய நாளில் மகிழ்ச்சியுடனும், நிம்மதியாகவும் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது உளம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள் உண்டாவதாக” என, முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும், ஸ்ரீல. சு. க. மத்திய கொழும்பு அமைப்பாளருமான “ஜனாதிபதி சட்டத்தரணி” பைஸர் முஸ்தபா, தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
சுமார் முப்பது வருடகாலமாக நம்மை ஆட்டிப்படைத்த யுத்தச் சூழ்நிலை நீங்கி, மக்கள் இன்று சந்தோ~மாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர். இதனால், இன்று மக்களுக்கு அச்சம் பீதி எதுவும் இன்றி எங்கும் போய் வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையிட்டு நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்,
“இது நமது இலங்கை நாடு. இங்கு அனைவருக்கும் சுதந்திரமுண்டு. எல்லோருக்கும் சகல உரிமைகளுடனும் இங்கு வாழலாம்” என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய, எல்லா சமயங்களும் விட்டுக்கொடுப்புடனும், சகிப்புத்தன்மையுடனும் இன நல்லுறவைப் பேணி, நாட்டின் ஐக்கியத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் இத்தருணத்தில் ஒத்துழைக்க முன்வரவேண்டும். அத்துடன் இன ,மத,மொழி, பிரதேச பேதங்களின்றி நாட்டைக் கட்டியெழுப்பவும், நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காகவும் தமது மேலான பங்களிப்புக்களையும், ஆதரவுகளையும் வழங்க முன்வரவேண்டும்.
இன்றைய ஹஜ்ஜுப் பெருநாள் நமக்கு தியாகத்தையும், சகோதரத்துவத்தையும் படிப்பினையாகத் தந்து கொண்டிருக்கின்றது. இந்தப் படிப்பினை நமது வாழ்விலும் எப்பொழுதும் வரவேண்டும். பயங்கரவாதம் நிறை வடைந்து நிம்மதியாக வாழும் நாம், இன்றைய ஹஜ்ஜுப் பெருநாளின் தாற்பரியத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
அப்போதுதான், இறைவன் நம்மீது அளவு கடந்த பாசத்தை அள்ளி வழங்குவான். இந்த நாள் நமக்குப் போதிக்கின்ற நல்லெண்ணங்களை, நமது வாழ்க்கையில் கடைப்பிடிப்பதோடு, நாட்டில் தொடர்ந்தும் சமாதானம் நீடித்து நிலைக்க வேண்டும் என்றும், சகல சமயங்களுக்கிடையிலும் ஐக்கியம், சௌஜன்யம், இன நல்லுறவு பேணப்படவேண்டும் என்றும், இப் புனித பெருநாள் தினத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராhத்திப்போமாக! “ ஈத்-முபாறக்”
(ஐ. ஏ. காதிர் கான்;)
