BREAKING NEWS

திவிநெகும சட்டத்துக்கே எதிர்த்து வாக்களிக்க முடியாமல் ஆதரித்து விட்டு தலைவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என வெட்கமின்றி கூறியவர்கள் மாகாண சபையின் ஆட்சியையே மாற்றப் போவதாக கூறுவது உலக மகா நகைச்சுவையாகும்.

வடக்கில் அமையப்போகும் ஆட்சியை முன்மாதிரியாகக்கொண்டு கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை முன்னெடுப்பதற்கு கிழக்கு முதலமைச்சரும், ஏனைய அமைச்சர்களும் தயாராக வேண்டும்
என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் கூறுவது யானையை பார்த்த குருடனின் கதை போன்றதாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர் நோக்கும் காணிப்பிரச்சினைகளை தீர்க்க முயலாவிட்டால் மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர போவதாக ஜெமீல் கூறியுள்ளதன் மூலம் அரசியல் யதார்தத்தை இன்னமும் அவர் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. கிழக்கு மாகாண சபையில் இருக்கும் ஸ்ரீ. முஸ்லிம் காங்கிரஸ் மத்தியில் அரசுக்கு முட்டுக்கொடுத்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்களை தலைவர்களாகக்கொண்ட கட்சியாகும். இந்தக்கட்சியின் தலைவர் அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்யாத வரை கிழக்கு மாகாண சபையில் அக்கட்சி உறுப்பினர்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்பதே யதார்த்தமாகும்.

மு. கா தலைவர் அமைச்சராக இருக்கும் வரை கிழக்கில் இந்த அரசாங்கத்துக்கே ஆதரவு வழங்குவர் என்பதை நாம் கிழக்கு தேர்தல் காலத்தில் பகிரங்கமாகவே கூறினோம். இது புரியாமல் ஏதோ மாற்றம் வரப்போகிறது என மக்களுக்கு ‘பே’ காட்டி மக்களை ஏமாற்றிய இவர்கள் இப்போது வட மாகாண தமிழ் மக்களின் கனதியான தீர்ப்பைக்கண்டதும் இவர்களுக்கு கொஞ்சம் ரோசம் வந்துள்ளது.

அமையப்போகும் வட மாகாண சபையை ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மத்தியில் அரசுக்கு முட்டுக்கொடுத்து அமைச்சுப்பதவியை பெற்று சுக போகம் அனுபவிப்பவர்கள் அல்ல என்பதை இவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை முன்மாதிரியாக கொள்வதாயின் முதலில் தமது தலைவர்களை அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்து அரசுக்கு முட்டுக்கொடுப்பதை நிறுத்தச் சொல்ல வேண்டும். அல்லது இவர்கள் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் கட்சியை தூக்கி வீச வேண்டும். அவ்வாறு செய்வதுதான் முன்மாதிரியாக கொள்ளல் என்பதாகும். இதற்கு இவர்களுக்கு முடியாமல் இருக்கும் நிலையில் கிழக்கு முதலமைச்சருக்கு உபதேசம் செய்வது தமது கையாலாகா தனத்தை மறைப்பதற்காகும்.

கிழக்கு முதலமைச்சர் முஸ்லிம் காங்கிரசால் அப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.  அவர் சுதந்திர கட்சியை சேர்ந்தவர் என்பதுடன் ஜனாதிபதியால் இப்பதவிக்கு அமர்த்தப்பட்டவர். அவர் தம்மை இப்பதவிக்கு சிபாரிசு செய்த  ஹக்கீம் எவ்வாறு பாராளுமன்றத்தில் எந்தப்பள்ளிவாயலும் தாக்கப்படவில்லை என அரசாங்கம் கூறிய போது மௌனியாக இருந்தாரோ அதனை முன்மாதிரியாகக்கொண்டு மௌனமாக இருப்பவர். இவ்வாறான முன்மாதிரியை கொண்டு செயற்படும் அப்பாவியை பார்த்து அரசுக்கு எதிராக களமிறங்கி வெற்றிபெற்றிருக்கும் தமிழ் கூட்டமைப்பை முன்மாதியாக கொள்ளச்சொல்வது பொருத்தமானதா என்பது கூட தெரியாதவராக ஜெமீல் இருக்கின்றார்.  
 
திவிநெகும சட்டத்துக்கே எதிர்த்து வாக்களிக்க முடியாமல் ஆதரித்து விட்டு தலைவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என வெட்கமின்றி கூறியவர்கள் மாகாண சபையின் ஆட்சியையே மாற்றப் போவதாக கூறுவது உலக மகா நகைச்சுவையாகும். அடுத்த தேர்தல் வரை இவர்கள் இப்படிச்சொல்லியே மக்களை உசுப்பேற்றி அவர்களின் முதுகுகளில் சவாரி செய்வார்கள் என்பதே உண்மையாகும்.


Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar