BREAKING NEWS

அஷ்ரபின் தனிப்பட்ட வாழ்வை சில இணையங்கள் கேவலப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளமையை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமாக இருந்த மறைந்த அஷ்ரபின் தனிப்பட்ட வாழ்வை சில இணைய ஊடகங்கள் கேவலப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளமையை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இது பற்றி முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்;ததாவது,

இலங்கை முஸ்லிம் அரசியலில் மிகப்பெரிய சாதனைகளை செய்த தலைவர் அஷ்ரபின் தனிப்பட்ட வாழ்வை நடிகை ராதிகாவுடன் சம்பந்தப்படுத்தி சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை தனிமனி உரிமை மீறல் என்பதுடன் வக்கிரப்புத்தி கொண்டவர்களின் செயலுமாகும்.
ஒரு மனிதனின் நான்கு அறைகளுக்குள்ளான தனிப்பட்ட வாழ்வை தோண்டிப்பார்ப்பதை எந்த மதமும் அனுமதிக்கவில்லை என்கிற அதே வேளை இது மனிதாபிமானமுமற்றதாகும். அத்துடன் மரணமடைந்து விட்ட ஒருவரை அதுவும் ஒரு சமூகத்தின் வெற்றிக்காக உழைத்த ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்வை கொச்சைப்படுத்துவது பிணத்தை திண்ணும் செயல் போன்றதாகும்.
ஒருவர் தனது பொது வாழ்வில், சமூகம் சம்பந்தப்பட்ட தனது பகிரங்க விடயத்தில் தவறு செய்திருந்தால் அதனை விமர்சிக்கலாம். ஆனால் அஷ்ரப் அவர்கள் வாழும் போது முன்வைத்து நிரூபிக்கப்படாத இத்தகைய அசிங்கங்கள் முஸ்லிம் சமூகத்தின் உள்ளங்களை வேண்டுமென்றே புண்படுத்துவதாகும்.
எம்மை பொறுத்தவரை அஷ்ரப் என்ற மாமனிதர் முஸ்லிம் சமூகத்துக்காகவும், இந்த நாட்டுக்காகவும் சுயநலனின்றி  உழைத்தவர் என்பதில் சந்தேகமில்லை. அவரது அரசியல் செயற்பாடுகளில் நாம் இருபது வீதமே அவருடன் முரண்பட்டு நின்றோம். மிகுதி என்பது வீதமான அவரது சிறந்த அரசியல் செயற்பாடுகளை துரோணரை பார்த்த ஏகலைவனாய் நாம் பார்த்து வியந்தோம்.  அத்தகைய சிறந்த மனிதரை இவ்வாறு மோசமாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
அவர் அரசியல் கட்சியின் தலைவராக மட்டுமன்றி கவிஞராக, கலையார்வம் கொண்டவராக இருந்ததுடன் அமைச்சராக இருக்கும் போது மிக அதிகமாய் தமிழ் மக்களுக்கும் சேவை செய்தவர். இந்த நிலையில் அவரை எவரும் சந்திக்கலாம், உதவிகள் பெறலாம் என்ற நிலை இருந்தது. இதனை இந்த வகையிலேயே நாம் பார்க்க வேண்டுமே தவிர பகிரங்கமாக தெரிய வராத ஒன்றை ஊகித்து செய்தி வெளியிடுவது ஊடக தர்மமுமில்லை, மனிதாபிமானதுமல்ல என்பதை சொல்லி வைக்கின்றோம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar