BREAKING NEWS

நபி தாவவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நற்போதனைகள்

நபி தாவூத் (அலை) அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்போது தனது மகன் சுலைமான் (அலை) அவர்களை அருகே அழைத்து கூறிய அறிவுரைகளை ஹமீத் இப்றாஹீம் என்ற இயற்பெயர் பெற்றிருந்த வண்ணக் களஞ்சிய புலவர் தாம் இயற்றிய ‘இராஜ நாயகத்தில்’ தேனினுமினிய தீந்தமிழ்ப் பாக்களில் வழங்கியுள்ளார்.

அவற்றின் பொருளினை பன்னூலாசிரியரான இஸ்லாமிய கலைக் களஞ்சியம் தந்த அறிஞர் ஏ.ஆர். அப்துர் றஹீம், தனது ‘முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் என்ற நூலில் அழகுற விளக்கியுள்ளார்.
அறிவுக் களஞ்சியமாக விளங்கும் அந்த அறிவுரைகளை அறிவோம்.
1. நீ யாரைப் பார்த்தும் நகையாடாதே, யார் மீதும் சினமுறாதே. நகையாடுவதும் சின முறுவதும் ஒருவனுடைய அறிவுத் தெளிவையும் ஆலோசனையையும் போக்கிவிடும்.
2. நீ எப்பொழுதும் இறைவனுக்கு அஞ்சிச் செயலாற்றுவாயக. இறைவனின் திருப்பெயரை எப்போதும் நினைவில் நிறுத்தி கனவிலும் கூடத் தியானம் செய்வாயாக. அவ்வாறு செய்து வருவாயின் ஈருலகிலும் நீ பெருவாழ்வு வாழ்வாய்.
3. உலகில் யாருடைய உதவியையும் பெரிது கண்டு அவர்களது ஆதரவில் நம்பிக்கை வைத்துவிடாதே. அவ்விதம் செய்யின் தன்னிகரிலானாகிய இறைவன் இதுகாறும் உனக்கு செய்துளள் நலன்களை குறைவு கண்டது போலாகிவிடும். அது மட்டுமல்ல இனிமேல் இறைவனின் பேரருளும் உனக்கு குறைந்துவிட ஏதுவாகும்.
4. உன்னுடைய பொருளாதார முறைகளையோ இரகசியங்களையோ கள்ளங்கபடமற்ற வெள்ளை மனதுடன் யாரிடமும் கூறிவிடாதே. அவ்வாறு கூறுவாயாயின் அதில் குறையைக் காணின், அவர்கள் உன்னைப் பெருமைக் கண்களுடனல்ல, இழிவுக் கண்களுடன் நோக்கத் துவங்கிவிடுவார்.
5. நீ மேலான வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த போதினும் இனிவரும் நாட்கள் இதைவிட மேலான நாட்களாக இருக்குமென்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். துன்பம் நேர்ந்த பொழுதும் நீ இவ்வாறே துணிவு பெற்றிருப்பாயின் இறைவனின் திருவருள் உன்மீது சார்வது உறுதி. அதில் எவ்வித ஐயமுமில்லை.
6. நல்லோர் நட்பை நாடுவாயாக, தீயோர் நட்பை தவிர்ந்து கொள்வாயாக, மார்க்க அறிஞர்களான உலமாக்களுடன் வீணே தர்க்கமிடாது அவர்களின் ஆலோசனையின் படி செயலாற்றுவாயாக.
7. நேரிய முறையில் திருமணம் முடித்து இல்லறம் நடத்துவாயாக. விபசாரத்தை விட்டும் விலகியிருப்பாயாக. விபசாரத்தை மேற்கொள்ளும் ஒருவன் உலகத்தவராலும் இறைவனாலும் இகழப்படுவான்.
8. நீ உன்னுடைய குடும்பத்தினர் மீது எத்துணை அன்பு செலுத்துவாயோ அத்துணை அன்பைப் பிறரிடமும் செலுத்துவாயாக. உலகம் முழுவதும் உன்னுடைய குடும்பம், உலக மக்கள் அனைவரும் உன் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்று கருதி எல்லோர் மீதும் அன்பு செலுத்துவாயாக. அவ்விதம் செய்து வருவாயாயின் உலகம் முழுவதும் உன் புகழொலி முழங்கும். இறைவனின் திருவருள் உன் மீது சொரியும். பெறுதற்கரிய பேறுகளெல்லாம் உன்னை வந்தடையும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar