BREAKING NEWS

ரணில் கட்சியைப் பலப்படுத்திய பின்னர் அரசை கவிழ்ப்பது பற்றி சிந்திக்க வேண்டும்

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. அதுவும் பிரிட்டனின் வெஸ்ட் மினிஸ்டர் அடிப்படையில் இருகட்சி பாராளு மன்ற ஜனநாயகம் தழைத்தோங்கும் ஒரு நாடாகும். ஜனநாயகத்தை வெற்றிகரமாக ஒரு நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் அந்நாட்டில் மக்கள் செல்வாக்குமிக்க ஆளும் கட்சியும் அதே அளவு மக்கள் ஆதரவைப் பெற்ற எதிர்க்கட்சியும் இருக்க வேண்டும்.

மூன்றாவது நிலையில் இன்னுமொரு மாற்றுக் கட்சி இருப்பது ஜனநாயகத்தின் வெற்றிக்கு சாதமாக இருக்கும் ஒரு சிறப்பம்சமாகும். பிரிட்டனில் கன்சவேர்டிவ் கட்சியும் தொழிற்கட்சியும் மாறி, மாறி அரசாங்கங்களை அமைப்பதுண்டு. லிபரல் கட்சி மூன்றாம் நிலை கட்சியாக அந்நாட்டின் ஜனநாயகத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறது. ஆளும் கட்சியின் கொள்கைகளினால் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள் என்று நினைத்தால் லிபரல் கட்சி எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும் உதவி செய்வதுண்டு.
இலங்கையிலும் 1970ம் ஆண்டு தசாப்தம் வரையில் இவ்விதம் இருகட்சி பாராளுமன்ற ஜனநாயகம் சிறப்புற்று விளங்கியது. எனினும், காலப்போக்கில் காளான்களைப் போன்று சிறிய கட்சிகள் தோன்றினாலும், அவை பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு இதுவரையில் எவ்வித தீங்கையும் இழைக்கவில்லை என்றே கூற வேண்டும்.
ஐக்கிய தேசியக்கட்சி இலங்கையின் மிகப் பழைமை வாய்ந்த அரசியல் கட்சியாக இருப்பதுடன், இன்று நாட்டின் பிர தான எதிர்க்கட்சியாகவும் இருக்கின்றது. அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக பத்திற்கும் மேற்பட்ட தேர்தல்களில் கட்சிக்கு படுதோல்வியை ஏற்படு த்திய கட்சித் தலைவராக இருந்த காரணத்தினால், அவர் பதவியை விட்டு விலகவேண்டுமென்ற எதிர்ப்புகள் கட்சிக்குள் எழுந்தன.
தலைமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தேசிய மட்டத்தில் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர் இல்லாத காரணத்தினால் கட்சியை ஆதரி க்கும் கல்விமான்களும், செல்வந்தர்களும் ரணில் விக்கிரம சிங்கவே கட்சியில் தொடர்ந்தும் தலைவராக இருக்க வேண்டு மென்று கருதியதனால் அவரை தொடர்ந்தும் கட்சித் தலைவராக இருக்கச் செய்து, கட்சியின் நிர்வாகப் பொறுப்பை தலைமைத்துவ சபையிடம் ஒப்படைப்பதென்ற தீர்மானத்தை எடுத்தனர்.
ஒரு தலைவர் இல்லாததனால் ஒரு கட்சி சீர்குலைந்து போவதை தவிர்ப்பதற்காகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்ட தாக கட்சி தரப்பினர் கூறுகிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் 65ஆவது மகாநாட்டில் உரையாற்றிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வீராவேசத்துடன், நாம் அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றுவோம் என்று மார்புதட்டிக் கொண்டு பேசியதற்கு கட்சியின் பெரும்பாலானோர் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.
பலவீனமடைந்துள்ள தனது கட்சியை மீண்டும் பலம்வாய்ந்த கட்சியாக கட்டியெழுப்பிய பின்னரே ரணில் விக்கிரம சிங்க அரசாங்கத்தை பதவியில் இருந்து இறக்குவது பற்றி முடிவெடுத்து செயற்பட வேண்டும். இது ஒரு சிறு குழந்தை தள்ளாடி நடப்பதற்கு முன்னர் வேகமாக ஓடுவதற்கு எடுக்கும் முயற்சிக்கு ஒப்பான செயலாகும்.
அன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்க நீளக் கை சேர்ட் அணிந்து உரையாடிக் கொண்டிருந்தார். அவர் தமது உரையின் போது நாம் எல்லோரும் இப்போதே வீதியிலி றங்கி ஆர்ப்பாட்டம் செய்து அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமென்று கூறிக்கொண்டே தனது நீளக்கை சேர்ட்டை மடித்து சண்டைக்கு தயாராகும் ஒருவரைப் போன்று மேடையில் நடித்தார். இது அவரது அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை முழு உலகத்திற்கும் பறைசாற்றியது.
அரசாங்கம் கடன்வாங்கி நாட்டையும் மக்களையும் சூறை யாடுகிறது என்று ரணில் விக்கிரமசிங்க ஒரு சந்தர்ப் பத்தில் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் முகமாக ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நாம் வெளி நாட்டிலிருந்து கடன் வாங்கியது ஏதோ உண்மைதான். நாட்டில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற் காகவே நாம் பணம் வாங்கினோம். ஆனால், ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் முன்னர் மக்களுக்கு பாணை உணவாக கொடுப்பதற்காக மட்டும் வெளிநாட்டு கடன் வாங்கியதென்று கிண்டல் செய்தார்.
ஐக்கிய தேசியக்கட்சி முதலில் தன்னை வளர்த்துக் கொண்டு பின்னர் அதிகாரத்தை கைப்பற்றுவதைப் பற்றி சிந்திப்பதே நல்லதென்று நாம் அதன் தலைவருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar