பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நம்பிக்கையின்மை காரணமாக அதில் எவ்விதத்திலும் பங்கு கொள்ள மாட்டோமென கூட்டமைப்பினர் ஒதுங்கிக் கொள்வார்களாயின் அது அவர்களுக்காக வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகமாகுமெனவும் அமைச்சர் வலியுறுத்திக் கூறினார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஆளும் கட்சி மற்றும் தெரிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சிகளின் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையினைக் கொண்டதாகவே பாராளுமன்ற தெரிவுக்குழுவினை நியமித்துள்ளார். இதில் பங்குபற்றும் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் விரும்பினால் தமது நிலைப்பாட்டினை தெரிவுக்குழுவுக்கு கருத்துக்களாக முன்வைக்க முடியும். இதற்கு மறுப்பு கிடையாது. இது பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமை. இந்த உரிமையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தவற விட்டுவிடக் கூடாது என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
தெரிவுக்குழுவில் பங்குகொள்ளாத பட்சத்திலும் தமது நிலைப்பாட்டினை கருத்துக்களாக முன்வைக்கும் சாட்சியாளர்களாக கூட்டமைப்பினர் முன்வருவதன் மூலம் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் குறித்து பூரணமான விளக்கத்தை பெற்றுக் கொள்ளக் கூடியதாக விருக்குமெனவும் அமைச்சர் கூறினார். நாளடைவில் இதுவே பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் நம்பிக்கையை கட்டியெழுப்ப ஊன்று கோலாக அமையுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
பாராளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பிலான எவ்வித ஈடுபாடும் காட்டாது ஒதுங்கியிருத்தல் மக்கள் பிரதிநிதிகளென்ற வகையில் நியாயமற்ற செயலாகும். நம்பிக்கையின்மை காரணமாக கூட்டமைப்பினர் பிரதிநிதிகளை நியமித்து தெரிவுக்குழுவில் பங்குபற்றாத போதிலும் சாதாரண சாட்சியாளராக கலந்து கொண்டு தமது கருத்துக்களை அவர்கள் முன்வைக்க வேண்டும்.
இதுவே நம்பிக்கையேற்பட வழிசமைக்குமெனவும் அவர் கூறினார். பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்த போதிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் தமது உறுப்பினர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் வவுனியா மாநாட்டினூடாக தெரிவுக்குழுவில் தமக்கு நம்பிக்கையில்லையென கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இத்தீர்மானம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கேட்டறிந்த போதே அவர் மேற்கண்ட விளக்கத்தையளித்தார்.
சபாநாயகரினால் தெரிவுக்குழு நியமிக்கப் பட்டது முதல் ஆளுங்கட்சியின் 19 உறு ப்பினர்களுடனேயே அதன் அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் 14 பேர் அங்கம் வகிப்பதற்கு அனுமதியளிக்கப் பட்ட போதிலும் இக்கட்சிகள் சார்பில் இதுவரையில் எவரும் அக்கட்சிகளால் தெரிவுக்குழுவில் நியமிக்கப்படவில்லை.
இவர்கள் தமது பொறுப்புகளிலிருந்து விலகி நடந்து கொள்கிறார்களென சுட்டிக்காட்டிய அமைச்சர் தினேஷ், தமது நிலைப்பாட்டினை கருத்துக்களாக முன்வைக்கும் உரிமையை இவர்கள் முறையாக பயன்படுத்த முன்வரவேண்டு மெனவும் கேட்டுக் கொண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் 24 ஆம் திகதி வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் இறுதியில் அறிக்கை யொன்று வெளியிடப்பட்டது. இதில் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணைவது இல்லையென்றும் யுத்த பாதிப்பு தொடர்பிலான கணக்கெடுப்பை தாங்கள் நிராகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.