பெப்ரவரி 5 வரை கட்டுப்பணம் செலுத்தலாம்a
மேல் மற்றும் தென்மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் பெப்ரவரி 6ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படும் என தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்தது.
வேட்பு மனு அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதியில் இருந்து பெப்ரவரி 5ஆம் திகதி வரை சுயேச்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்த கால அவகாசம் வழங்கப் பட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தென் மற்றும் மேல் மாகாண முதலமைச்சர்களின்
வேண்டுகோல்களுக்கு அமைய இரு மாகாண சபைகளும் கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் கலைக்கப்பட்டன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 12ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இரு மாகாண சபைகளும் கலைக்கப்பட்டதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பினைத் தொடர்ந்து 1988 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபை சட்டத்தின் 10 (1) பிரிவிற்கமைய தேர்தல் ஆணையாளர் வேட்பு மனு ஏற்கும் திகதியை நேற்று அறிவித்தார். வேட்பு மனு ஏற்கும் இறுதித் தினத்தில் இருந்து 5 வாரங்களுக்கும் 8 வாரங்களுக்கும் இடைப்பட்ட நாளில் வரும் சனிக்கிழமை ஒன்றில் இரு மாகாணங்களுக்குமான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. இதன்படி மார்ச் மாத இறுதியில் 22 அல்லது 29 ஆம் திகதியில் தேர்தல் நடைபெறும் என தேல்தல் செயலக வட்டாரங்கள் கூறின.
தென் மற்றும் மேல் மாகாண சபைளுக்கான தேர்தல்கள் 2013 வாக்காளர் இடாப்பின்படியே நடத்தப்பட உள்ளதோடு இம்முறை 58,88,082 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மேல் மாகாணத்தில் இருந்து 40,14,230 பேரும் தென் மாகாணத்தில் இருந்து 21,40,498 பேரும் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தென் மாகாண சபைத் தேர்தல் மூலம் 53 பேர் தெரிவு செய்யப்பட உள்ளதோடு இரு போனஸ் ஆசனங்கள் அடங்கலாக 55 பேர் மாகாண சபைக்கு தெரிவாக உள்ளன. மேல் மாகாண சபைத் தேர்தல் மூலம் 102 பேர் தெரிவாக உள்ளதோடு இரு போனஸ் ஆசனங்கள் உட்பட 104 பேர் மாகாண சபைக்குத் தெரிவாக இருப்பதாகவும் தேர்தல் செயலகம் கூறியது.
இதே வேளை ஐ ம. சு. மு., ஐ. தே. க. , ஜே. வி. பி. அடங்கலான பிரதான கட்சிகள் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. ஐ. ம. சு.மு. வேட்பு மனுக்குழு எதிர்வரும் 20 ஆம் திகதி கூடி வேட்பாளர்கள் குறித்து ஆராய உள்ளது. ஐ. தே. க.வும் வேட்பு மனு குழுவொன்றை நியமித்துள்ளது