மேற்கண்டவாறு பெரியகல்லாறு கடல் நாச்சியம்மன் வளாக மண்டபத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி சம்பந்தமான கூட்டத்தில் கலந்து கொண்டு தேசிய மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய வண்ணக்கர் க. சீவரெத்தினம் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசுகையில்:
அடக்கு முறைக்கு எதிராக நாம் மேற்கொண்ட ஆயுதப் போராட்டம் ஐந்து பத்து வருடங்களில் இலக்கை அடைந்துவிடும் என்றே நாம் எதிர்பார்த்தோம். ஆனால் 30 வருடங் களாகியும் எம்மால் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் மக்கள் தொடர்ந்து பேரழிவுகளையே சந்தித்து வந்தனர். வாழ்க்கைக்கான போராட்டமே வாழ்க்கை என்ற நிலையைத் தோற்றுவித்தது. இதிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே நாம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டோம். தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்தோம். மக்களுக்கு நன்மை பயக்கும் செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.
நாம் தேசிய ரீதியில் இணைந்திருப்பது துரோகம் என யாரும் நினைகக் கூடாது. இலங்கை அரசியல் நிலையைப் பொறுத்தவரை ஒரு தமிழரோ அல்லது ஒரு முஸ்லிமோ ஜனாதிபதியாக வருவது சாத்தியமில்லாத விடயம். எனவே யாருக்கு அதிகம் வாய்ப் பிருக்கின்றதோ அவருக்கு எமது வாக்குப் பலத்தைக் காட்டி அவருக்கு ஆதரவளிப்பதன் மூலமே எமது உரிமைகளையும், அபிவிருத்தியையும் வாதாடிப்பெற்றுக் கொள்ள முடியும்.
எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு செல்வது அழகாகத்தான் இருக்கும். ஆனால் ஆவது ஒன்றுமில்லை. எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் தங்கள் கதிரையைப் பிடிக்கும் வரை மட்டுமே எமக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார்கள். கதிரை கிடைத்ததும் எம்மைக் கைவிட்டுவிடுவார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
எனவே நாம் எமக்கான அரசியல் பலத்தை உருவாக்குவது இன்றைய தேவையாக இருக்கிறது. அதன் மூலமே எமது அரசியல் அபிலாசைகள் நிறைவேறக் கூடியதாக இருக்கும். எனவே பொதுமக்கள் அதை அடைவதற்காக மாற்று வழிகளில் செல்வது தவறாகாது. மாற்று வழிகள் இன்றி அவற்றை அடையவும் முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
பட்டிருப்புத் தொகுதியானது தனித் தமிழ் தொகுதியாகும். இங்கிருந்து இரண்டு மூன்று மந்திரிகள் உருவாவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. எனவே அதை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே எமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு அதிகளவு அபிவிருத்தியை அறுவடை செய்து கொள்வதற்கும் பட்டிருப்பு சிறந்ததொரு களமாகும்.
மட்டக்களப்பு தெற்கு எல்லைப் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கின்றது. இப் பிரதேசத்திற்கான தனியான பிரதேச செயலக கோரிக்கை நியாயமானது. இதுவும் வட்டாரப் பிரிப்பு நிறை வடைந்ததும் சாத்தியமாகும்.