சுகாதார அமைச்சின் பிரதம சட்ட அதிகாரியான சட்டத்தரணி ரிஸானா அஹமட் 2013ம் ஆண்டுக்கான சுகாதார துறைக்கான வீராங்கனை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவத்தின் போது அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
சுகாதார அமைச்சில் கடமையாற்றும் சகல உத்தியோகத்தர்கள் மத்தியில் ஆர்வம் மற்றும் செயல் திறனை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கான பொதுத் தொடர்பாடல் பயிற்சி வேலைத் திட்டம் சுகாதார அமைச்சின் அபிவிருத்தி பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இத்திட்டத்தின் போதே சட்டத்தரணி ரிஸானா அஹமட்டுக்கு மேற்படி விருது வழங்கப்பட்டது.
இவர் சிகரட் பெட்டிகளின் 80 வீதமான பகுதியில் வாய்ப்புற்று நோயைச் சித்தரிக்கும் படங்களை உள்ளடக்குவதன் அவசியம் தொடர்பான சட்டத்தை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய தயாரித்தவராவார்.
அச்சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் உலக சுகாதார ஸ்தாபனம் 2013ம் ஆண்டுக்கான சர்வதேச புகைத்தல் எதிர்ப்புக்கான விருதை அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடந்த ஜூன் மாதம் வழங்கியது.
புகைப்பிடித்தலுக்கு எதிரான சர்வதேச வேலைத் திட்டத்தில் தெளிவானன பங்களிப்பை இலங்கை அளித்து வருவதாலும், இந்நாட்டை சர்வதேச மயப்படுத்துவதற்கும் அளித்த பங்களிப்பின் நிமித்தம் 2013ம் ஆண்டுக்கான சிறந்த சுகாதார வீராங்கனையாக சட்டத்தரணி ரிஸானாவை சகாதார அமைச்சின் சகல அதிகாரிகளும் ஏகமனதாகத் தெரிவு செய்தனர்.