BREAKING NEWS

தென், மேல் மாகாண தேர்தலில் அரசை விரட்டியடிக்க அடித்தளமிடுவோம்! :திஸ்ஸ

ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காமல் சர்வாதிகார போக்கில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தக் குடும்ப ஆட்சியாளர்களை விரட்டியடித்து மக்கள் நலன் காக்கும் புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான அடித்தளத்தினை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களில் உறுதிப்படுத்துவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
 
குறித்த இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான தேசிய வேட்பு மனுக் குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட ரீதியாக நேர்முகப் பரீட்சை நடத்துவதற்காக ஆறு மாவட்ட வேட்பு மனுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய வேட்பு மனுக்குழு கரு ஜயசூரிய தலைமையில் செயற்பட்டு வருகிறது. அதற்கு மேலதிகமாக கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தனித்தனியான வேட்பு மனுக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
 
கொழும்புக்கு ஜோசப் மைக்கல் பெரேராவும், கம்பஹாவுக்கு பி.ஹரிசனும் களுத்துறை மாவட்டத்துக்கு கயந்த கருணாதிலக்கவும், காலிக்கு தயாகமகேயும், மாத்தளைக்கு விஜயதாச ராஜபக் ஷவும் அதே போன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு ரஞ்சித் மத்தும பண்டாரவும் தலைமை தாங்குகின்றனர்.
 
மாவட்ட வேட்பு மனுக்குழுக்கள் மாவட்ட ரீதியாகத் தேர்வுகளை நடத்தி வேட்பாளர் பட்டியலை தயாரித்து தேசிய வேட்பு மனுக்குழுவுக்கு கையளிக்கும். அதன் பின்னர் குறித்த பட்டியலை ஆராய்ந்து இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
 
குறித்த இரு மாகாண சபைத் தேர்தல்களிலும் எவ்வாறு பிரசாரப் பணிகளை மேற்கொள்வது என்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றோம். விசேடமாக இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள், நாட்டின் எதிர்காலம் போன்றவை தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தவுள்ளோம்.
 
இந்த அரசாங்கத்தின் மீதும் அதன் செயற்பாடுகள் மீதும் மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள். அத்தோடு ஆட்சி மாற்றமொன்றை எதிர்பார்த்துள்ளார்கள். எனவே, அதற்கான அடித்தளத்தை இந்த மாகாண சபைத் தேர்தலில் ஏற்படுத்த வேண்டும்.
 
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளும் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களும் கூட இன்று வெறுப்படைந்துள்ளார்கள். அதன் பிரதிபலிப்புகளை அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளின் வரவு - செலவு திட்டங்களில் காண முடிந்தது. அரசாங்கத்திற்குள்ளேயே எதிர்ப்பு ஆரம்பித்துள்ளது.
 
எதிர்க்கட்சிகள் மீதும்,எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் மீதும் அடக்கு முறைகளை பிரயோகித்த இந்த அரசாங்கம், தற்போது அரசாங்கத்தின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மீதும் அதனை கட்டவிழ்த்துள்ளது. எனவேதான் அவர்களும் வெறுப்படைந்துள்ளார்கள்.
 
எனவே, இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலிருக்கும் இந்த அரசாங்கம், ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமை பேரவையினை சாட்டாக வைத்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறது. ஆகவே அவற்றை நம்பி மக்கள் ஏமாந்துவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar