BREAKING NEWS

தேர்ச்சியை நிரூபிக்கத்தவறின் பதவி உயர்வுகள், சலுகைகள் ரத்து

இரண்டாம் மொழித் தேர்ச்சியை, நிரூபிப்பதற்காக அரச துறை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்த காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க இரண்டாம் மொழித் தேர்ச்சியை நிரூபிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த ஐந்து வருடகாலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.
அரச கரும மொழி கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்தும் வகையில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுக்கமைய சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2007ம் ஆண்டுக்குப் பின்னர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வர்கள் மற்றும் எதிர்காலத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுபவர் களுக்கு இந்த இரண்டாம் மொழித் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அரச கரும மொழி கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.
இதற்கிணங்க 2007-2011 காலத்திற்குள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் அரச துறையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வர்களின் இரண்டாம் மொழி தேர்ச்சிக்கான காலம் ஐந்து வருடத்திலிருந்து மேலும் இரண்டு வருடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அரச கரும மொழி திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியன இணைந்து நடத்தும் எழுத்து மூல பரீட்சையொன்றுக்கும் மேலும் ஒரு வாய்மூல பரீட்சைக்கும் உட்படுத்தப்படுவர். இதன் மூலம் தமது இரண்டாம் மொழி தேர்ச்சியை நிரூபிக்க முடியாதவர்களின் பதவியுயர்வுகள் உட்பட்ட சலுகைகளை இழக்க நேரிடும் எனவும் அமைச்சு தெரிவித்தது.
இச்சுற்றறிக்கைக்கிணங்க 161 சிங்கள நிர்வாக மொழி பிரதேசங்கள் மற்றும் 62 தமிழ் மொழி நிர்வாக பிரதேசங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் இப் பிரதேசங்களில் மொழித் தேர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் ஒரு சலுகையாக க.பொ.த. சாதாரண பரீட்சையில் தமிழ் அல்லது சிங்களத்தை இரண்டாம் மொழியாக எழுதி சித்தியடைந்தவர்கள் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் வாய்மூல பரீட்சைக்கு மட்டுமே அவர்கள் தோற்றினால் போதுமானது எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தவிர மேலும் சில சிபாரிசுகள் மேற்படி சுற்றறிக்கை மூலம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by OddThemes - Videopiar