கருணாவை பிரித்து விடுதலைப் புலிகள் அமைப்பை பலவீனப்படுத்தி யுத்தத்தை வெற்றி
பெறுவதற்கு ஐ.தே.கட்சி அரசாங்கமே அடித்தளமிட்டது. என ஐ.தே.கட்சி குருநாகல் மாவட்ட எம்.பி. அகிலவிராஜ் காரியவசம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எமது அரசாங்கம் அன்று கலைக்கப்படாமல் இருந்திருந்தால் மன்னாரிலிருந்து தமிழ் நாட்டுக்கு பாலம் அமைத்து உள்நாட்டு வருமானத்தை அதிகாரித்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாழ்க்கை செலவு அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீது உரையாற்றும் போதே அகிலவிராஜ் காரியவசம் எம்.பி. இதனை தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உடையாற்றுகையில்,
விடுதலைப் புலிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு கருணா அம்மானை அவ்வியக்கத்திலிருந்து பிரித்து புலிகள் அமைப்பை பலவீனப்படுத்தி யுத்தம் வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை ஐ.தே.கட்சியே போட்டது.
அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் யுத்தம் வெற்றி பெறச் செய்யப்பட்டது.
மன்னாரில் விமான நிலையம் அமைப்பதற்கும் மன்னாரிலிருந்து தமிழ் நாட்டுக்கு பாலம் அமைத்து அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளை இங்கு அமைக்கப்படும் விமான நிலையத்திற்கு கொண்டு வருவதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டது.
இதன் மூலம் நாட்டுக்கு பாரிய வருமானம் கிடைத்திருக்கும் இவ்வாறானதொரு நிலையிலேயே எமது அரசாங்கம் கலைக்கப்பட்டது என்றார்.