BREAKING NEWS

கொழும்பு மாவட்டத்தில் உலமா கட்சி தனித்து போட்டி

மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் தனித்துவ தன்மானக்குரல் என்ற வகையில் உலமா கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அதன் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். அவர் மேலும் இது பற்றி தெரிவித்துள்ளதாவது,


முஸ்லிம் மக்கள் எதிர் நோக்கும் பாரிய பள்ளிவாயல் உடைப்புக்கள், சமய சமூக பாதிப்புக்களுக்கு எத்தகைய தீர்வும் அரச தரப்பில் கிடைக்காத நிலையில் முஸ்லிம்கள் அரச கட்சிக்கோ அல்லது அரசின் கைக்கூலிகளாக இருந்து கொண்டு முஸ்லிம்களை ஏமாற்றி வாக்குகள் பெற்றுக்கொண்டு உல்லாசமாக இருக்கும் முஸ்லிம் அமைச்சர்களை தலைமைகளாகக்கொண்ட சுயநல ஏமாற்றுக்கட்சிகளுக்கோ வாக்களிக்க முடியாது. அதே வேளை ஐக்கிய தேசியக்கட்சியும் இன்னமும் பேரினவாதிகளின் ஆதிக்கத்திலேயே இருந்து வருகின்றது. அனைத்து இன மக்களின் இதயங்களை எவ்வாறு வென்றெடுப்பது என்பது பற்றி தெரியாத ஒரு நடைப்பிணமாகவே அக்கட்சியும் உள்ளது.
அத்துடன் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம்களின் தன்மானக்குரல்களுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அக்கட்சி தயக்கம் காட்டி வருகிறது.


இத்தகைய சூழ் நிலையில் உலமாக்களின் தலைமையிலான எமது கட்சி  வெறுமனே முஸ்லிம்களுக்கு ஆலோசனை கூறுபவர்களாக மட்டும் இருக்காது மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிடவுள்ளதன் மூலம் தேர்தல் களத்துக்கும் முகம் கொடுக்கவுள்ளோம். இதன் மூலம் முஸ்லிம்களின் தனித்துவ தன்மானக்குரலான எமது கட்சியை எந்தளவுக்கு கொழும்பு முஸ்லிம்கள் ஆதரிக்கின்றார்கள் என்பதை அறிவதுடன் அவர்களின் சமூகப்பற்றை சர்வேதசத்துக்கும் தெரியப்படுத்த முடியும். மேலும், மாற்றீடு வேண்டி; தவிக்கும் முஸ்லிம் சமூகத்தின் தன்மனக்குரலாக பாரிய அழுத்தங்களுக்கு மத்தியில் மேற்கொண்டு செல்லும் சிறந்த மாற்றீடாக நாம் தொடர்ந்தும் இறையுதவியால் எமது அரசிலை கொண்டு செல்ல இது உதவும்.

அண்மையில் தேர்தல் ஆணையாளருடன் எமது மேற்கொண்ட சந்திப்பின் போது அவரது ஆலோசனையின் படி எமது கட்சி வண்ணாத்திப்பூச்சி சின்னத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து தனித்துவமாக தனது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது. பணம், அதிகாரம், பகட்டு, பசப்பு வார்த்தைகள் போன்றவற்றுக்கு மயங்காது கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் தமது சமூகத்தின் தன்மான தனித்துவக்குரலான உலமா கட்சியை (முஸ்லிம் மக்கள் கட்சி) ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு என முபாறக் மௌலவி தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar