BREAKING NEWS

சர்வதேச விசாரணைகள் அவசியம் : யாழ். ஆயர் வலியுறுத்தல்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை தேவை எனவும் இந்த விசாரணைகள் இலங்கையில் நடத்தப்பட்டால் இராணுவம் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களே அதனை மேற்கொள்வார்கள் என்பதால் இவ்விசாரணைகள் சர்வதேச அளவில் நடத்தப்படவேண்டும் என்பதையே மக்களாகிய நாங்கள் விரும்புகின்றோம் எனவும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வாலிடம் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
 
 
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து நல்லூர் ஆலயத்தை தரிசித்த பின்னர் யாழ். ஆயர் இல்லத்தில் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடினார். 
 
இச் சந்திப்பின் பின்னர் யாழ். ஆயர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வால் தலைமையிலான குழுவினர் இன்று  எம்மைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.  
 
ஜெனீவாவிற்குச் செல்லவுள்ள அமெரிக்கக் குழுவில் தானும் செல்லவுள்ளதாக நிஷா எம்மிடம் தெரிவித்தார்.  ஜெனீவாவில் எவ்வாறான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவேண்டும் எனவும் அவர் எம்மிடம் வினவினார். அவருடய இந்தக் கேள்விக்கு நாங்கள் பதிலளிக்கையில்,
 
முக்கியமாக இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பில் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய நம்பகமான ஒரு விசாரணையை மேற்கொள்வது அவசியமாகும். அதன் மூலமே இங்கு எவ்வளவு பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? போன்ற விடயங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள முடியும். இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தோம்.
 
விசாரணை இங்கு நடத்தப்படாதுவிட்டால் வெளிநாட்டில் நடத்தப்படவேண்டும் என்றும் மக்களாகிய நாங்கள் விரும்புகின்றோம் என வலியுறுத்தியுள்ளோம்.
 
இறுதியாக ஜெனீவாக் கூட்டத்தொடரில் என்ன கூற விரும்புகிறீர்கள் என அவர் எங்களிடம் வினவினார்.
 
அதற்கு நாங்கள் பதிலளிக்கையில், காணாமல் போனோர் தொடர்பில் மக்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். கண்களுக்கு முன்பாகவே எமது உறவுகளை கையளித்தோம். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் அரசாங்கம் ஒரு பதிலை வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்தோம்  என்றார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar