கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை தீர்மானத்தின் போது கிழக்கில் பாரிய பற்றாக்குறையாக உள்ள மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப எந்த தீர்மானமும் எடுக்காமையை முஸ்லிம் மக்கள் கட்சியின் மௌலவிமாருக்கான பிரிவான உலமா கட்சி
வன்மையாக கண்டித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்ததாவது,
முஸ்லிம் முதலமைச்சரையும், மூன்று முஸ்லிம் அமைச்சர்களையும் கொண்ட கிழக்கு மாகாண சபை தொடர்ந்தும் மௌலவிமார்களையும், இஸ்லாம் பாடத்தையும் உதாசீனம் செய்து வருவது கவலை தருவதாகும்.
கடந்த கால தேர்தல்களில் கிழக்கு மாகாண மௌலவிமார் தமது அரசியல் சக்தியை காட்டத்தெரியாமல் முஸ்லிம் காங்கிரசுக்கும், அதாவுள்ளா, ரிசாத் ஆகியோரின் கட்சிகளுக்கே வாக்களித்து ஏமாந்தார்கள். தொடர்ந்தும் இவர்கள் மௌலவிமாரை இன்னமும் கிள்ளுக்கீரைகளாகவே கருதுகிறார்கள் என்பதையே கிழக்கு மாகாண சபை அமைச்சரவை தீர்மாணத்தில் மௌலவி ஆசிரியர் நியமனம் உள்வாங்கப்படாமையாகும்.
கிழக்கு மாகாண மௌலவிமார் உலமா கட்சியின் தலைமைத்துவத்துடன் இணைந்து அதன் அரசியல் செயற்பாட்டை பகிரங்கமாக ஆதரித்து செயற்பட முன்வந்திருந்தால் நிச்சயம் இந்நியமனத்தை வென்றெடுத்திருக்க முடியும். ஆனால் சமூகப்பற்றற்ற உறுப்பினர்கள் பின்னால் அலைந்து எமது மௌலவிமார் வயோதிபத்தை அடைந்ததுதான் மிச்சமே தவிர அவர்களுக்கான உரிமைகள்; கிடைக்கவில்லை.
அதே போல் அரசு சமய பாடத்தை கட்டாயமாக்கியிருந்தும் இத்தருணத்தில் இஸ்லாம் சமயத்தை அதன் மூல மொழியான அறபு மூலம் கற்ற மௌலவி ஆசிரியர்களை நியமிக்காமை என்பது முஸ்லிம் மாணவர்கள் மீதான உரிமை மீறலாகும். இவ்வாறு முஸ்லிம் மாணவர்களின் உரிமையை பெற்றுத்தராத முஸ்லிம் கட்சிகளை ஒதுக்குவது முஸ்லிம் பெற்றோரின் கடமையாகும்.
ஆகவே கிழக்கு மாகாண சபை உடனடியாக மௌலவி ஆசிரிய நியமனங்களை வழங்கி கிழக்கு பாடசாலைகளில் நிலவும் மௌலவி ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க உடனடியாக முயற்சிக்க வேண்டும். இல்லாவிடில் இது விடயம் சம்பந்தமாக கிழக்கு மாகாண மௌலவி, மௌலவியாக்களை ஒன்று திரட்டி கிழக்கு மாகாண சபையை கண்டிக்கும் கண்டன கூட்டமொன்றை நடாத்தவும் உலமா கட்சி தயங்காது என முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
