தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிரான தண்டனைகளை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் அமைச்சர்
மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தற்பொழுதுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் வழங்கப்படும் தண்டனைகளோ, தண்டமோ போதுமானதல்ல என்று கூறிய அவர், பல வருடங்களாக இதில் திருத்தம் செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,
தேர்தல் சட்டங்களை மீறி செயற்படும் வேட்பாளர்கள் குறித்து பரவலாக பேசப்படுகிறது. கடந்த காலத்தில் தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் தேர்தல் சட்டங்கள் மாற்றப்படவில்லை. தண்டனைகளும் அதிகரிக்கப்படவில்லை. சில குற்றங்களுக்கு நூறு ரூபாவே தண்டம் அறவிடப்படுகிறது.
1947 இல் கொண்டுவரப்பட்ட இந்த தண்டத்தொகை இன்றும் அவ்வாறே உள்ளது. தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் அதிகரிக்கப்படவேண்டும். அதற்கான முன்னெடுப்புகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் என்றார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா;
அரசியல் யாப்பை திருத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தேர்தல் சட்டத்தை மாற்றுவது குறித்தும் தேர்தல் முறையை மாற்றுவது தெடர்பாகவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தை திரு த்தி விருப்பு வாக்குமுறை மாற்றபப்பட்டதன் மூலம் தேர்தல் முறைபாடுகள், மோதல்கள் பெருமளவு குறைந்துள்ளன. எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தல் முறையை மாற்றவது குறித்து ஆழமாக ஆராயப்பட்டு வருகிறது.
உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தை மாற்றியதன் மூலம் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இது தொடர்பில் முடிவு எடுக்கப்படும். அரசியலமைப்பை திருத்துவது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் யோசனைகள் வந்துள்ளன.
இந்த குழுவில் ஐ. தே. க., ஜே. வி. பி., தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன இணையவில்லை. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தமது யோசனைகளை எமக்கு எழுத்து மூலம் முன்வைக்குமாறு கோருகிறோம். எமது கட்சி ஒரு போதும் முறைகேடாகவோ தவறாகவோ நடக்கும் வேட்பாளர்களை பாதுகாக்காது.
வேட்பு மனு வழங்கிய பின் தேர்தல் சட்டத்தை மீறிய வேட்பாளரை நிறுத்த முடியாது. அவர் தெரிவான பின்னர் உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். பதவி வழங்குகையிலும் இது குறித்து கவனிக்கப்படும் என்றார். அமைச்சர் ஜோன் செனவிரத்னவும் இங்கு உரையாற்றினார்.