BREAKING NEWS

அவுஸ்திரேலியா இலங்கையை ஆதரிக்கிறது


* இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; ஆஸி.வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு
இலங்கையின் சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற யோசனையை அவுஸ்திரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

பொதுமக்களுக்கு எதிராக குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது, சட்ட விரோதமான கொலைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட புதிய அறிக்கையின் உண்மைத்தன்மையை ஏற்றுக் கொள்ள முடியாதென்று இலங்கை அரசாங்கம் நிராகரித்ததை அடிப்படையாக வைத்தே அவுஸ்திரேலியா இந்த முடிவை எடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடரில் அடுத்த மாதம் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் இலங்கை மீதான சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டுமென்று கேட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களின் அடிப்படையில் இலங்கை செயற்பட தவறிய காரணத்தினால் அரசாங்கத்திற்கு எதிராக நீதி விசாரணை ஏற்படுத்துவதுடன் வழக்கு தொடர வேண்டுமென்றும் இவ்விரு நாடுகளும் கேட்டுள்ளன.
தற்போது கிடைக்கப் பெற்றுள்ள அறிக்கைகளின் படி அமெரிக்கா சர்வதேச விசாரணையை நடத்தும் தீர்மானத்திற்கு அனுசரணை அளிக்க உள்ளதாக தெரியவருகிறது. இந்த தீர்மானத்திற்கு அவுஸ்திரேலியா அனுசரணையாளராக இருக்குமா என்று கேட்ட போது அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அவுஸ்திரேலியா என்றுமே பாரதூரமான சர்வதேச குற்றச் செயல்களில் இந்த முரண்பாட்டின் போது ஈடுபட்ட இருதரப்பினர் குறித்தும் விசாரணை செய்து ஒழிவு மறைவற்ற முறையில் சுதந்திரமாக விசாரணை செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறதென்று வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறினார்.
இனிமேல் சம்பிரதாயபூர்வமான விசாரணைகளை சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்துடனேயே மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் எட்மிரல் திஸார சமரசிங்க, பொது நலன்புரி ஆதரவு நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ளார்.
இவ்வறிக்கையில் யுத்தத்தின் போது இலங்கை பாதுகாப்பு படையினர் பொதுமக்களை யுத்த சூனிய வலயத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் மீது பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டதுடன் சரணடைய வந்த எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களையும் கொலை செய்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படுதோல்வியடைந்த எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் ஆத்திரமடைந்த நிலையில் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இவை என்று இலங்கையின் உயர் ஸ்தானிகர் நிராகரித்துள்ளார்.
30 சாட்சியங்களை ஆதாரமாக வைத்தே இந்த அறிக்கையை அவ்வமைப்பு தயாரித்திருந்தது. தற்போதுள்ள ஆதாரங்களின்படி இலங்கை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளதை நிராகரித்துள்ள எட்மிரல் திஸார சமரசிங்க இலங்கை 30 ஆண்டுகளுக்கு பின்னர் நல்லிணக்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதென்று தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar