வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களது பிரச்சினைகள் தொடர் பில் அன்று சர்வதேச மயப்படுத்தியிருந்தால் எமது மக்களது பிரச்சினைகள் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்று அந்தப்பணிகளை நாம் கட்சியமைத்து செய்ய வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இது தொடர்பில் அண்மையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷிதுடன் பேசியதாகவும் அவர் கூறினார்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் பல்வேறு அகதி முகாம்களில் வாழ்ந்து அனுபவித்த துன்பங்களை நாமறிவோம். எத்தனை விதமான இன்னல்களை நாம் சந்தித்தோ. இன்றும் அவைகள் எமது கண்முன் காட்சிகளாக இருக்கின்றது. நடந்து வந்த பாதையின் முற்களில் பதம் பார்த்த பாதங்களில் இருந்து வழிந்த குருதிகளின் வரலாற்றினை சுமந்தவர்கள் நாங்கள். இன்று எமது மக்களுக்கான அரசியல் தலைமைத்துத்தினை இல்லாமல் செய்யும் பணிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். கட்சிகளின் பேரால் எமக்குள் பிளவை ஏற்படுத்த பார்க்கின்றனர்.
எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநியாயங்களை தட்டிக் கேட்டால் என்னை இனவாதியாக சித்தரித்துக் காட்டுகின்றனர். சில ஊடகங்கள் என்மீது அபாண்டங்களை சுமத்தி தொடர்ந்து தமிழ் மக்களின் விரோதிகளாக காட்ட முனைகின்றனர். கடந்த 20 வருடங்களாக அல்லல்பட்டு வாழ்ந்து வரும் இம்மக்களின் விமோசனத்திற்கோ, இம்மக்களது எதிர்காலம் சிறந்ததாக அமைய வேண்டும் என்ற சிந்தனைகளற்றவர்கள், எமக்கு கிடைக்க இருந்த மற்றுமொரு மாகாண சபை பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கினர். அமைப்புக்கள் ஒவ்வொரு பெயர்களில் ஏற்படுத்தி எமக்கெதிரான சதிகளை செய்தபோதும் அல்லாஹ் அதனை முறியடித்தான்.
இன்று எமது சமூகம் செல்லும் பாதையானது ஆபத்தானதாகவுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஒழுக்கமின்மை ஏற்பட ஆரம்பித்துள்ளது. வீடுகளில் தொலைக்காட்சி நாடகங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனை பார்த்து செயலுருவம் கொடுக்க முனைகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.
இஸ்லாமிய நெறி தவறாத சமூகத்தினை கட்டியெழுப்ப புத்திஜீவிகள் முன்வர வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.