முஸ்லிம் தரப்பினரால் இந்த நாட்டில் எங்காவது ஒரு பொலிஸ் நிலையத்தில், பொதுபல சேனாவுக்கு எதிராக ஒரு முறைப்பாடாவது செய்யப்பட்டிருந்தால், அதனை எமக்குத் தெரியப்படுத்துங்கள் என நாம் இந்நாட்டின் பாதுகாப்புத் துறையினரிடம் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று தெரிவித்தார்.
பொதுபல சேனாவினர் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் செயற்பட்டமை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு பொலிஸில் சென்றவுடனேயே பிணையில் விடுவிக்கப்படுகிறார்கள் என அமைச்சர் ஹக்கீம் தேர்தல் பிரச்சார மேடையொன்றில் தெரிவித்திருந்தமை குறித்து பதிலளிக்கையிலேயே தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் மேடைகளில் பொதுபல சேனாவுக்கு எதிராக தெரிவித்து வரும் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், கொழும்பில் இன்று பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த தேரர்,
ஹக்கீமுக்கு இதற்கு மேல் இந்த நாட்டில் ஆட்டம் போட இடமளிக்க மாட்டோம். ஹக்கீம் கொடுத்த பொய்யான அறிக்கையின் மூலமே இந்த நாட்டுக்கு சர்வதேச அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த அடிப்படைவாதிகளை இப்படியே விட்டுவிட்டால் நாம் விகாரைக்குள் பிரித் ஓதுவதைக் கூட குற்றம் பிடிப்பார்கள். இந்த நாட்டில் முஸ்லிம் என்ற சொல்லைக் கூட பயன்படுத்த எமக்கு இந்த அடிப்படைவாதிகள் தடைபோடுவார்கள்.
உடனடியாக ஹக்கீம் கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்து இந்த நாட்டின் சிங்கள சமூகத்திடம் மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் பொதுபல சேனாவின் செயலாளர் மேலும் கூறினார். (மு)