அமைச்சர் ஜீ.எல் கொழும்பில் விளக்கம்
அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன் வைக் கப்பட்டுள்ள நகல் யோசனையின் எட்டாவது சரத்தின் (ஏ) பிரிவில் குறிப்பிடப் பட்டுள்ளதற்கு அமைய விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஆணையாளர் நவிப்பிள்ளைக்கு எவ்வித தார்மீகப் பொறுப்பும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்து ஒருவார காலப் பகுதிக்குள் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை அவசியம் தேவையென்பதை வலியுறுத்தியதோடு. அதுமட்டுமல்லாது ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை விசாரணை அவசியமென பிரசாரம் மேற்கொண்டுவந்தார். இத்தகைய தார்மீக உணர்வு இல்லாத ஒருவரால் எப்படி விரிவான விசாரணைகளை மேற்கொள்ள முடியுமெனவும் அமைச்சர் பீரிஸ் கேள்வியெழுப்பினார்.
இதேவேளை, ஒரு நாட்டின் மீது விரிவான விசாரணை நடத்துவது மனித உரிமை ஆணையாளரின் கடமையல்ல. இது குறித்து சாசனத்தில் எப்பகுதியிலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
விரிவான விசாரணைக்கு அதிகாரிகள், வசதிகள் மற்றும் சலுகைகள் தேவை. இதற்கான வரவுசெலவுத்திட்டம் நவநீதம்பிள்ளைக்கு ஒதுக்கப்பட்டிருக்காத நிலையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நகலில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய 2015 மார்ச்சில் நவிபிள்ளை எவ்வாறு இலங்கைக்கு எதிரான விசாரணை நடத்துவார் என்பது சந்தேகமே.
அந்த வகையில் நகலில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்களில் பிழை ஏற்பட்டுள்ளதென்றே கருத வேண்டியுள்ளதெனவும் அமைச்சர் பீரிஸ் கூறினார்.
ஜெனீவாவில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் குற்றச்சாட்டிற்கான பதிலளிப்பு என்ற தலைப்பில் தேசிய கல்விமான்கள் கவுன்ஸிலினால் நேற்று மஹாவலி கேந்திர நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த செயலமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அனேகமான உறுப்புரிமை நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தங்களுக்குக் கட்டுப்பட்டே இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு சார்பாக வாக்களிக்க வேண்டிய நிலைப்பாட்டில் உள்ளன. இது நியாயமற்ற செயல் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நான் ஜெனீவாவில் தங்கியிருந்த நாட்களில் தார்மீக மற்றும் சட்ட ரீதியாக கையாளப்பட வேண்டிய மனித உரிமைகள் விவகாரம் குறுகிய அரசியல் நோக்கத்திற்காகக் கையாளப்படுவதினை என்னால் மட்டுமன்றி அநேகமான நாடுகளால் உணரக்கூடியதாகவிருந்தது.
யுத்தம் முடிவடைந்து 2009 மே 19ஆம் திகதிக்குப் பின்னர் எமது நாட்டில் எவ்வித பயங்கரவாத செயற்பாடும் இடம்பெறவில்லை. இதனை சர்வதேசம் புரிந்துகொள்ள மறுக்கிறது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முழுமையாக அமுல்படுத்தப்படுமா என ஜெனீவாவுக்கான அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதுவர்கள் என்னிடம் துருவித்துருவி கேள்வியெழுப்பினார்கள்.
இதில் மறைப்பதற்கு எம்மிடம் எதுவும் இல்லை. அனைத்து விடயங்களையும் நாம் வெளிக்கொணருவோம் என நான் பதிலளித்தேன். உலகில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் இலங்கையை மட்டுமே குறிவைத்து பேசுவது நியாயமாகத் தென்படவில்லையென்றும் அமைச்சர் கூறினார்.
ஜெனீவா இலங்கையின் மாற்று அரசாங்கம் போல் நடந்துகொள்கிறது. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் அந்நாட்டு அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டதும் இந்தியாவில் அமெரிக்காவுக்கு எதிரான கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா இந்தியாவுடனான உறவை சுமுகமாக்கிக் கொண்டது. அதேபோன்று எம்மையும் நசுக்குவதற்கு முயற்சிக்கிறது.
எமக்கு எதிரான பிரேரணை மூன்றாவது தடவையாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் இன, மத கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோமாயின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.