கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவிடம் 112 முறைப்பாடுகளை கையளித்த பின்னர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அவ்விடத்திற்கு விஜயம் மேற்கொண்ட அக் குழுவினர், குருக்கள் மடம் கடற்கரைப் பகுதியில் 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 3 இடங்களை பார்வையிட்டதோடு அவ்விடங்களை தோண்டுவதற்கான நடவடிக்கைகளுக்கு சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்தோடு இது சம்பந்தமாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கை காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு சமுகமளிக்குமாறு ஆணைக் குழுவின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ் விஜயத்தில் காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பராணகம, ஆணைக் குழுவின் ஆணையாளர்களான திருமதி மனோ ராமநாதன், திருமதி சுரஞ்சனா வித்தியரத்ன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், ஆணைக் குழுவின் உயரதிகாரிகள், ஊடகவியலாளர்கள், புலனாய்வு பிரிவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.