இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு ஆதரவு கோரும் கமெரூன்
Posted by
aljazeeralanka.com
on
March 11, 2014
in
Jeniva
|
இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் தலைமையிலான விசாரணையொன்றிற்கு அதிகாரத்தை வழங்கும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமொன்றுக்கான ஆதரவினை பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரூன் கணிசமான சக தலைவர்களிடம் நேரில் கோரியுள்ளதாக த பெல்பாஸ்ட் டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கென கடந்த வருடம் நவம்பரில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் கமெரூன் நம்பகத்தன்மை வாய்ந்த உள்ளக விசாரணையொன்றை இந்த மாதம் (மார்ச்) முடிவடைவதற்குள் நடத்த வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எச்சரித்திருந்தார்.
தனது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க ராஜபக் ஷ தவறியுள்ளாரென நம்பும் கமெரூன் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு ஒரு வருட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படல் வேண்டுமென்பதில் ஆர்வமாகவும் உள்ளதாக அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தல (டவுணிங் ஸ் ரீட்) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள ஆட்சியாளர் மீதான அழுத்தம் உயர்வடைந்து வரும் நிலையில் இலங்கையில் இடம்பெற்றிருந்த உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அட்டூழியங்கள் குறித்து சுயாதீனமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என கமெரூன் தற்போது அழுத்தம் கொடுத்து வருகின்றார்.