BREAKING NEWS

பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஆசீர்வாதத்துடன் நான் வெற்றி பெறுவேன். - ஐ.ம.சு.மு. வேட்பாளர் எம்.எச். மன்ஸில்


(ஐ. ஏ. காதிர் கான்; )
கொழும்பு  வாழ் மக்கள், இம்முறை ஐ.ம.சு. முன்னணிக்கு பெரு வெற்றியைப் பெற்றுக் கொடுக்க ஆயத்தமாகிவிட்டார்கள் . காரணம்;, ஜனாதிபதியின் தலைமையின் கீழ் அரசாங்கம் மேற்கொண்டுவரும் பாரிய அபிவிருத்திப் பணிகளாகும்.

நான் கொழும்பு மாநகர சபையில் ஆளும் கட்சியின் பிரதான எதிரணித் தலைவராக செயற்பட்டாலும், இம்முறை மேல் மாகாண கொழும்பு மாவட்டத்தில் மத்திய  கொழும்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று  வெற்றி பெற்று, மேல் மாகாண சபைக்குச் செல்வேன் என்று , மேல் மாகாண சபையின் கொழும்பு மாவட்ட ஐ.ம.சு.மு. வேட்பாளர் எம்.எச். மன்ஸில் தெரிவித்தார்.
கொழும்பு-10, மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ.  மண்டபத்தில் (09) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் றீஸா ஸரூக் ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில், அவர் மேலும் உரையாற்றும்போது தெரிவித்ததாவது:-
ஸ்ரீல. சு. க. மத்திய கொழும்பு  அமைப்பாளரும் , முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சருமான “ஜனாதிபதி சட்டத்தரணி” பைஸர் முஸ்தபாவின் ஆசீர்வாதத்துடன் நான் இம்முறை களமிறங்கியுள்ளமை, எனக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்துள்ளது.
உண்மையில், சென்ற 2009 ஆம் ஆண்டில் இத்தேர்தலில் நான்  தனித்து களமிறங்கியதால் தனிமைப்படுத்தப்பட்டேன். ஆனால், இம்முறை எனக்குப் பிரதியமைச்சர், அதிகூடிய வலுவைப் பெற்றுத் தந்துள்ளதுடன், இம்முறை எனக்கு பின்னால் கொழும்பு மாவட்ட மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை ஆகியவற்றைச் சேர்ந்த 31 உறுப்பினர்கள்  இருந்து செயற்படுகிறார்கள் என்பதையும் பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
மத்திய கொழும்பில் எனக்கு எவ்விதச் சவால்களுமில்லை. நிச்சயம் அதிகூடிய விருப்பு வாக்குகளால், நான் இம்முறை மேல் மாகண சபைக்குத் தெரிவு செய்யப்படுவேன்.
மத்திய கொழும்பு வாழ் மக்கள், என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.  அவர்களுக்கு நான் மிகச் சிறந்த சேவைகளையும் செய்துள்ளேன். இதனை, அவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள், கொழும்பு மக்கள் நன்றியுள்ளவர்கள். எனவே, அவர்கள் நன்றி மாறாமல், இம்முறை என்னைப் பெரும்பாலான வாக்குகளால் ஆதரிப்பார்கள் என்ற திடமாக நம்பிக்கை எனக்குண்டு. நான் அவர்களுக்குச் செய்த உதவிகளுக்கு நன்றிக்கடனாக, என்னை ஆதரித்து, மாகண சபைக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு வேண்டிக் கொள்கின்றேன் என்றார்.
இக்கூட்டத்தில், பிரதியமைச்சர் “பைஸர் முஸ்தபா” , மாநகர சபை உறுப்பினர் றீஸா ஸரூக் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar