BREAKING NEWS

இஸ்லாமிய அரசியல் என்றால் என்ன? -முபாறக் அப்துல் மஜீத்


இஸ்லாமிய அரசியல் என கூறும் போது இலங்கையில் எப்படி இஸ்லாமிய அரசியல் சாத்தியமாகும் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இதற்குக்காரணம் இஸ்லாத்தை ஒரு சிறிய பாத்திரத்துள் இவர்கள் வைத்துப்பார்ப்பதினாலேயே இத்தகைய கேள்விகளை எழுப்புகிறார்கள்.


இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கைத்திட்டமாகும். ஒரு மனிதனின் வாழ்வில் அவன் பிறந்தது முதல் இறக்கும் வரையான அனைத்து விடயங்களிலும் இஸ்லாம் அவனுக்கு வழி காட்டுகிறது. உண்பது, உறங்குவது, ஏன் சிறு நீர் கழிப்பது கூட எவ்வாறு என வழி காட்டும் இஸ்லாம் மனித வாழ்வின் மிக பிரதானமான அம்சமான அரசியல் வழி காட்டலை செய்யாமல் விட்டு விட்டதா? இல்லை. அதற்கும் மிகச்சரியான வழி காட்டலை செய்துள்ளது.

முஹம்மத் நபி (சல்) அவர்கள் சமய போதகராக ஆரம்பித்து ஆட்சித்தலைவராக பரிணமித்தார்கள். ஒரு நாட்டை ஒரு பிரதேசத்தை எவ்வாறு ஆள்வது என்பதை மிக தெளிவாகவே வழி காட்டியுள்ளார்கள்.

இன்று நமது மக்களில் பலர் இஸ்லாமிய அரசியல் என்றால் அது இஸ்லாமிய நாட்டுக்குத்தான் பொருந்தும் இலங்;கை போன்ற நாடுகளுக்கு பொருந்தாது என நினைப்பதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தில் குறை காண்கிறார்கள்.

இஸ்லாமிய அரசியல் என்றால் என்ன என்று நாம் தெரிந்து கொள்ளுமுன் இஸ்லாம் பற்றி விரிவாக படிக்க வேண்டும். அப்போதுதான் இஸ்லாமிய அரசியல் பற்றி பரிந்து கொள்ள முடியும்.
ஆனாலும் இஸ்லாமிய அரசியலை சுருக்கமாக பின் வரும் உதாரணத்தின் மூலம் விளங்கலாம். மனித வாழ்வில் திருமணம் நடக்கிறது. இதனை இஸ்லாமிய திருமணம் என நாம் எப்போது அழைக்கிறோம்? இஸ்லாத்துக்கு முரணில்லாத வகையில் பொய் ஏமாற்று மோசடி இல்லாத திருமணத்தை இஸ்லாமிய திருமணம் என்கிறோம். அதே போல் ஒரு வியாபாரத்தை இஸ்லாமிய வியாபாரம் என்கிறோம். எப்போது அவ்வாறு கூறுகிறோம்.? உண்மை, நேர்மை அந்த வியாபாரத்தில் இருந்தால் அதனை இஸ்லாமிய வியாபாரம் என்கிறோம். அதே போலத்தான் மக்களுக்கான அரசியலில் உண்மை, நேர்மை, வாய்மை இருந்தால், பொய், ஏமாற்று, மோசடி இல்லாவிட்டால் அதனை இஸ்லாமிய அரசியல் என உறுதியாக அடையாளப்படுத்த முடியும். இஸ்லாமிய வியாபாரம் செய்கின்ற ஒருவருக்கு எவ்வாறு இறைவனிடம் மறுமையில் நன்மை கிடைக்குமோ அவ்வாறே இஸ்லாமிய அரசியலை செய்பவருக்கும் நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் துரதிஷ்டம் என்னவென்றால் அரசியல் என்றால் அனைத்து கள்ளத்தனமும் ஹலாலாகும் என சமூகம் எண்ணிக்கொண்டிருக்கிறது. ஐ வேளை தொழுவோர் கூட இத்தகைய சிந்தனையில்தான் உள்ளனர்.

ஆகவே நமது நாடு முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொள்ளாது விடினும் இஸ்லாமிய அரசியலை தாராளமாக இஹ்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய அரசியலை முஸ்லிம் சமூகம் முன்னெடுத்தால் நிச்சயம் முஸ்லிமல்லாத மக்களும் அத்தகைய இஸ்லாமிய அரசியலை ஏற்றுக் கொள்வார்கள்.
-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar