BREAKING NEWS

முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகம் இழைப்பது தனது நோக்கமல்ல


- பிரதியமைச்சர்பைஸர் முஸ்தபா கூறுகிறார்

- ( ஐ. ஏ. காதிர் கான் )

நாம் அரசாங்கத்துடன் இருந்தாலும்,எங்காவது முஸ்லிம் சமூகத்துக்கென ஏதாவது பிரச்சினை ஒன்று ஏற்படுமிடத்து, அப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து வருகின்றோம்.

இதன் ஓர் அங்கமாக,கிறேண்ட்பாஸ் பள்ளிவாசல் சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இங்கு பிரச்சினை ஏற்படும் போது முதன் முதலில் அங்கு தனி மனிதனாக நான் மாத்திரம் நின்று செயற்பட்டேன். என்னுடன் எந்தவொருஅரசியல் வாதியும் உதவிக் கரம் நீட்ட முன் வரவில்லை. நானே முன்னிலையில் தனிமையாக நின்று செயற்பட்டு, சகல பிரச்சினைகளையும் அரசாங்கத்துடன் பேசி தீர்த்து வைத்தேன்.
இந்நிலையில் என்னை விமர்சிப்பவர்கள், தங்களை சுய விசாரணை செய்து கொண்டால்,அதுவே சமூகத்துக்குச் செய்யும் மா பெரும் நன்மையாகும் என்று முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும், ஸ்ரீல. சு. க. மத்திய கொழும்பு அமைப்பாளருமான   “ஜனாதிபதி சட்டத்தரணி” பைஸர் முஸ்தபா ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
ஐ.ம.சு.கூ. கொழும்பு மாவட்ட வேட்பாளர் எம்.எச். மன்ஸிலை ஆதரித்து, மட்டக்குளியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதியமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்தும் போது தெரிவித்ததாவது:-
நாம் அரசாங்கத்துக்குள் இயங்கினாலும், முஸ்லிம் சமுகத்தின் விடயத்தில் எந்நேரமும் கண்ணும் கருத்துமாக கரிசணையாகவே இருந்து வருகின்றோம். கொழும்பு - கிறேண்ட்பாஸில் குழப்ப நிலை ஏற்பட்டபோதும், முஸ்லிம் மக்கள் துன்பத்தில் விழுந்து கிடந்த போதும், நாமே அவர்களின் துக்க துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, உதவிக் கரம் நீட்டினோம்.
கிறேண்ட்பாஸ் பள்ளிவாசல் உட்பட நாட்டின் பல பள்ளி வாசல்களில் முஸ்லிம்களுக்கு எதிராக சில பௌத்த இன வாதிகள் கிளர்ந்தெழுந்தபோது, அந்த இடங்களுக்கு முதன் முதலாகச் சென்று எதிர்த்துப் போராடினோம். எனக்குப் பிறகே ஏனைய சில முஸ்லிம் அமைச்சர்கள் அங்கு வந்து போனார்கள். இதனை, என்னை பத்திரிகைளின் வாயிலாக விமர்சிப்பவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
நான் பதவி பட்டங்களுக்காகவோ, பெயர் எடுப்பதற்காகவோ ஆசைப்பட்டவன் அல்ல. அனைத்தையும் முஸ்லிம் சமுதாயத்திற்காக வேண்டியே செய்து வருகின்றேன.; அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகம் இழைப்பது, தனது நோக்கமல்ல. எனக்கு எனது முஸ்லிம் சமுதாயம் தேவை. அவர்கள் சிறந்த சூழலில் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ வேண்டும். ஏனைய மக்களைப் போன்று சகல உரிமைகளையும் அவர்களும் பெற்று வாழ வேண்டும். இதுவே என் விருப்பமாகும். இது அல்லாமல் பேருக்கும் புகழுக்கும் தம்பட்டம் ஆடுவது எனது நோக்கமல்ல” என்றார். வேட்பாளர் மன்ஸிலும் இங்கு உரை நிகழ்த்தினார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar