கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீமைப் பார்த்து
கடும் தொனியில் அமைச்சர் ஹக்கீம் அவர்களே நீங்கள் உங்களுடைய
கட்சிக்காரர்களை கூட்டிக்கொண்டு இன்று வேண்டுமானாலும் வெளியேறலாம் என்று
கூறியும் அமைச்சர் ஹக்கீம் இதுவரைக்கும் அரசாங்கத்தை விட்டு வெளியேறாமல்
இருப்பது முஸ்லிம் சமூகத்துக்கும், கட்சிப் போராளிகளுக்கும் ஒரு
வெட்கக்கேடாகவே அமைகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறுகின்றோம்
என்ற முடிவை இன்று எடுத்தால் தன்னுடன் எத்தனை உறுப்பினர்கள் இருப்பார்கள்
என்ற அச்சத்தில்தான் அமைச்சர் ஹக்கீம் எந்தவிதமான முடிவையும் மேற்கொள்ளாமல்
சாக்குப்போக்கை கூறிவருகின்றார் என்பதனை அரசியல் வட்டாரங்களில்
பேசிக்கொள்கின்றனர்.
மாற்று முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் அமைச்சுப் பதவியில் இல்லாமல்
கட்சியினை நடாத்த முடியாது என்று வீர வசனம் கூறும் ஹக்கீம் தனது
உறுப்பினர்களுடன் அரசாங்கத்தை விட்டு வெளியேறாமல் இருப்பது சந்தேகமாகவே
இருக்கின்றது.
கடந்த ஆண்டுகளில் இருந்து நாங்கள் வெளியேறமாட்டோம் முடிந்தால் அரசாங்கம்
எங்களை வெளியேற்றட்டும் என்கின்ற சாணக்கியம் இல்லாத தலைவர்
அரசாங்கத்தையும், அதில் உள்ள முஸ்லிம் அமைச்சர்களையும் குத்திப்பேசுவது
வேடிக்கையாகவே உள்ளது. பிரதேசங்களுக்கு வந்து அரசாங்கத்தைப் பற்றி மோசமாக
விமர்சிப்பதும், அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியினுடன் மன்டியிட்டுக்
கிடப்பதும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது.
கடந்த மாகாண சபை தேர்தலின் பின் முதலமைச்சர் பதவிக்கு சண்டை பிடித்து
பின்பு நாங்கள் அரசாங்கத்துடன் உறுதியான உடன்பாட்டை செய்திருக்கின்றோம்
என்று கூறிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முஸ்லிம் மக்களுக்கு
அதிகார ரீதியாக செய்த சலுகைகள் என்ன? இக்கட்சி ஏன் இன்று வரைக்கும்
அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றது என்று பல மாவட்டங்களிலும் இக்கட்சி
போராளிகள் பரவலாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முக்கிய
உறுப்பினர்கள் அரசாங்கத்துடனும், ஜனாதிபதியுடனும், ஆளும் கட்சி முக்கிய
அமைச்சர்களுடனும் விசுவாசமாகவும், அந்நியொன்னியமாகவும் பழகி வருகின்றனர்.
தற்சமயம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால்
எத்தனை உறுப்பினர்கள் வெளியேறுவார்கள் என்பது புரியாத புதிரே.
Kalmunai hot
