BREAKING NEWS

அஸாத்சாலி தவ்ஹீத் ஜமாஅத்தை மன்னிப்பு கேட்கும்படி சொல்வதை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.

அல்குர்ஆனை அவமதித்தமைக்காக பொது பலசேனா பகிரங்க மன்னிப்புக்கேட்காத வரை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மன்னிப்புக்கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ள உலமா கட்சி இது விடயத்தில் அரசியல்வாதியான அஸாத்சாலி தவ்ஹீத் ஜமாஅத்தை மன்னிப்பு கேட்கும்படி சொல்வதை வன்மையாக கண்டித்துள்ளது.


இது சம்பந்தமாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி கூறியதாவது,
இந்த நாட்டில் மதங்களுக்கிடையே முதலில் பிரச்சினைகளை உருவாக்கியது பொதுபலசேனாவே என்பதை முழு உலகும் அறியும். அதன் பின்னரே பொது பல சேனாவின் கருத்துக்கள் பிழை என்பதை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் உலமாக் கட்சியும் விரிவாக எடுத்து விளக்கின.

இந்த வகையில் புத்தர் மனித மாமிசம் சாப்பிட்டார் என தவ்ஹீத் ஜமாஅத்தினால் கூறப்பட்டது பற்றி நாம் அந்த ஜமாஅத்தினரை வினவிய போது புத்தருடன் இருந்த ஒருவரே மனித மாமிசம் சாப்பிட்டதாகவும், புத்தர் என தவறுதலாக தம்மால் சொல்லப்பட்டு விட்டதாகவும் இது பற்றி தாம் மன்னிப்புக்கேட்டதாகவும் கூறினர். ஆகவே இதற்கான மன்னிப்பு கேட்ட பின்பும் தவ்ஹீத் ஜமாஅத் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவதில் அர்த்தமில்லை.

அத்துடன் மும்மணிகளை வணங்குவது சம்பந்தமான தவ்ஹீத் ஜமாஅத்தினரின் கருத்து பௌத்த மதம் பற்றிய உண்மையை அவர்கள் விளங்கியுள்ள விதத்தில் சொல்லியுள்;ளதாகவே நோக்க வேண்டியுள்ளது. அதுவும் பொதுபலசேனாவின் உருவாக்கத்துக்குப்பின்னரே இத்தகைய கருத்துக்களை கூற வேண்டிய நிலை அவர்களுக்கேட்பட்ட நியாயத்தை நாம் உணர வேண்டும். அவர்கள் அவ்வாறு கூறியமை தவறு என்றால் அது பற்றிய உண்மையை எடுத்துக்காட்ட வேண்டியது பௌத்தர்கள் கடமையாகும். ஆனாலும் குர்ஆன் பற்றி தப்புத்தப்பாக பொது பலசேனா பேசியதை தவறு என்றும் அவ்வாறு குர்ஆனில் இருப்பதாக காட்டினர்ல்; பத்து லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் உலமா கட்சி அறிவித்தும் இன்னமும் அவர்கள் நிரூபிக்கவுமில்லை, மன்னிப்புக்கேட்கவுமில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.


எது எப்படியிருப்பினும் இத்தகைய முரண்பாடுகளுக்கு அடிப்படைக்காரணம் அரச ஆதரவுடன் இயங்கும் பொது பல சேனாவாகும். அவர்கள் அமைதி காத்திருந்தால் இவ்வாறு மக்களிடையே மத ரீதியிலான கசப்புக்கள் உண்டாகியிருக்காது. இத்தகைய அரசுக்குத்தான் ஹக்கீம், ரிசாத், அதாவுள்ளா போன்றோர் இன்னமும் காவடி தூக்கிக்கொண்டிருக்;கிறார்கள்.

அதே போல் இஸ்லாம் பற்றி சரியாக தெரியாத அசாத் சாலி போன்றோர் இது விடயத்தில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மன்னிப்புக்கோர வேண்டும் என கோருவதை நாம் வன்மையாக கண்டிககிறோம். இது மத ரீதியலான கருத்துக்கள்; என்பதால் இது விடயத்தில் உலமா சபை, உலமா கட்சி போன்றவை தீர்மானம் மேற்கொள்ள வேண்டுமே தவிர எடுத்த எடுப்பில் தவ்ஹீத் ஜமாஅத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் கண்டிக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar