ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விசாரணைக் குழு இலங்கை வருவதனை தடுப்பதிலேயே அரசாங்கம் தற்போது கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்றதென சபை முதல்வரும் நீர்ப்பாசனத்துறைய மைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தினகரனுக்குத் தெரிவித்தார்.
‘ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவி பிள்ளையினால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழு இலங்கைக்குள் அனுமதிக்கப்படக் கூடாது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்’ என சுட்டிக்காட்டிய அமைச்சர் அது தொடர்பான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றுவதிலேயே எமது முழுக் கவனமும் உள்ளது என்றும் கூறினார்.
சர்வதேச விசாரணைக் குழு இலங்கை வருவது தொடர்பிலான பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரையில், அந்தக் குழு பற்றியோ அவர்கள் முன்னெடுக்கவுள்ள விசாரணைகள் குறித்தோ ஆராய்வது தற்போதைக்கு அவசியமற்று எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நவி பிள்ளையினால் நியமிக்கப்பட்டுள்ள குழு இலங்கைக்குள் விசாரணைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அதற்கு முகம்கொடுக்க அரசாங்கம் எவ்வாறு தயாராகியுள்ளதென அமைச்சர் நிமல் சிறிபாலவிடம் கேள்வியெழுப்பியபோது ’சர்வதேச விசாரணைக் குழு இலங்கைக்குள் வருவார்களென்ற பேச்சுக்கே இடமில்லாத நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு தயாராவது அநாவசியமானதும் அர்த்தமற்றதுமான செயலாகும்’ என்றார்.
விசாரணைக் குழுவின் வருகையை பாராளுமன்ற தீர்மானத்திற்கூடாக தடுப்பதுவே எமது பிரதான குறிக்கோளாக இருப்பதனால் அதற்குரிய செயற்பாடுகளிலேயே எமது முழுக் கவனமும் ஒரு முகப்படுத்தப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.
இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா மனித உரிமை குழு இங்கு வந்து விசாரணை நடத்த அனுமதிக்க கூடாது. என்று கோரி, ஆளும் தரப்பு எம். பி. க்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கடந்த 11 ஆம் திகதி பிரேரணை முன்னறிவித்தல் கையளிக்கப்பட்டது. இந்த பிரேரணையில் ஆளும் தரப்பு எம். பிக்கள் ஒன்பதுபேர் கையொப்பமிட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.