இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தாக்குதல்கள் தொடர்பில் இது வரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
நோலிமிட் தாக்கப்பட்டதை பார்வையிட அங்கு விஜயம் செய்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் கருத்து தெரிவிகையிலே இவ்வாறு கூறினார்.
மேலும் கூறுகையில்;
பிரச்சினை தோற்றுவிக்கப்படும் போது நாங்கள் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவாத்தை நடாத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் வாக்குறுதி தருகின்றார்கள் ஆனால் மறுகணம் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் முடக்கி விடப்படுகின்றன.
அளுத்தகம துயரிலிருந்தும், இழப்பிலிருந்தும், அச்சத்திலிருந்தும் மீளாத முஸ்லிம்கள் மீது மீண்டும் அடுத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நொலிமிட் ஆடையகமானது முஸ்லிம் சகோதரருக்குச் சொந்தமானது என்பதனால் இதனை தாக்குவதற்கு கடந்த வருடத்திலிருந்தே பேரினவாதிகள் முயற்சி செய்துவருவதனால் சிங்கள இணையத்தளங்கள் சொல்வது போல் இதனை சாதாரண மின்னொழுக்கு என்று தட்டிக் கழித்து விட முடியாது.
இவ் நோலிமிட் ஆடையகம் முஸ்லிம் சகோதரருக்கு சொந்தமானதாக காணப்பட்டாலும் அதிகமான சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பௌத்த விகாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்கள் வைத்தியசாலைகள் என்று எவ்வித பாகுபாடும் இன்றி உதவிகளை வழங்குவருகின்றது. இவ்வாறிருந்தும் நோலிமிட் மீதான நாசகார செயலானது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
நோலிமிட் மீதான நாசகாரச் செயலானது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்குவதற்கு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அளுத்கம குழப்பத்தைப் போன்று ஒரு கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்க சூழ்ச்சியை பேரினவாதிகள் முன்னெடுக்ககின்றனர்.
இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடப்பது பல்லினம் வாழும் இலங்கைக்கு பொருத்தமானது அல்ல. நோலிமிட் மீதான நாசகார செயல் இலங்கை முஸ்லிம்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இனவாதம் பேசும் ஞானசார தேரர் போன்றவர்களை அரசாங்கம் கைது செய்யாமல் இருப்பதானதே இது போன்ற செயல்கள் தொடர்வதற்கு காரணம்.
கடந்த வருடம் கண்டியில் உரையாற்றிய ஞானசார தேரர் பெசன்பக் மற்றும் நோலிமிட் நிறுவனங்கள் தமது ஆடையகங்களில் வேலைபுரியும் சிங்கள இளைஞர் மற்றும் யுவதிகளை இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்வதாக குற்றஞ்சாட்டினார்.
இவர் இனவாதம் பேசி சில நாட்களின் பின் மகரகம பெசன் பெக் மீது காடையர்கள் தாக்குதல் நடத்தினர். வெளிப்படையாக பௌத்த பிக்குகள் தாக்குதலில் ஈடுபட்டதால் இவர்கள் மீது பலத்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைக் கருதி தற்போது மறைமுகமாக நாசகார சதியில் பேரினவாத சக்திகள் இறங்கியுள்ளது.
நோலிமிட் மீதான நாசகாரச் செயலில் பிரதான சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தினால் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். தொடர்ச்சையாக மேற்கொள்ளப்பட்டு வரும் முஸ்லிம் மீதான தாக்குதலுக்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளாவிடின் பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் அது ஈடுகட்ட முடியாதவையாகவே இருக்கும்என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தார்.