முஸ்லிம்களின் பாதுகாப்பு, உரிமைகள் விடயத்தில் யாருக்கும் சோரம் போகாது மக்களை ஓரணியில் திரட்டி போராடுவேன். அளுத்கம தாக்குதல் சம்பவங்களின் கொடுமைகளை விபரிக்கக் கூட வார்த்தைகள் இல்லை என திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்;.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
அளுத்கம தர்கா நகர், பேருவளை முஸ்லிம்களின்; மீது இனவாதிகளின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில்,
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட உயர்மட்ட குழுவொன்று நேற்று அதிகாலை (16) தாக்குதலுக்குள்ளான தர்கா நகர், பேருவளை பிரதேசங்களுக்கு சென்றிருந்தோம்.
இனவாதிகளின் தாக்குதல் சம்பவங்களை நேரடியாக சென்று பார்வையிட்ட போது அதனை விபரிப்பதற்குக்கூட வார்த்தைகள் வரவில்லை. இச்சம்பவத்தினால் முழு முஸ்லிம் சமூகமும் கொதிப்படைந்துள்ளதை என்னால் உணர முடிகின்றது.
முஸ்லிம்களின்; மீது இனவாதிகள் தாக்குதல் நடத்திய வேளை பாதுகாப்பு படையினர் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என அப்பிரதேச மக்கள் என்னிடம் தெரிவித்ததுடன் இதன் பின்னணியில் அரசாங்கம் உள்ளதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். இதன் மூலம் மக்களை பாதுகாக்கும் கடமையில் அரசாங்கம் தவறிவிட்டது என உணர முடிகிறது.
எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீது இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாமல் முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த கூடிய உபாயங்கள், முஸ்லி;ம் காங்கிரஸ் ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் முஸ்லிம்கள் மீது அரசாங்கத்தின் அங்கறை இன்மை பற்றி நேற்று திட்கட்கிழமை (16) நடைபெற்ற கட்சியின் அதியுயர்பீட கூட்டத்தில் மிகவும் காட்டமாக எனது கருத்துக்களை தெரிவித்தேன்.
கடந்த இரண்டு வருடங்களாக சிங்கள இனவாத அமைப்புக்களினால் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத செயற்பாட்டினை பலமுறை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். ஆனால் அரசாங்கம் முஸ்லிம்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தவில்லை.
அளுத்கம தர்கா நகர், பேருவளை விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை முஸ்லிம் காங்கிரஸூக்கு இல்லை. இத்தாக்குதல் சம்பவத்தினை வெறும் சமாளிப்புடன் முடித்துக் கொள்ள என்னால் முடியாது. இச்சம்பவத்திற்கு எதிராக கட்சி அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கக் கூடிய நடவடிக்கையினை மேற்கௌளவேண்டும்.
எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களை ஒன்றிணைத்து முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் சாத்வீக போராட்டங்களை நடாத்தி நாட்டிக்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளேன்.
அத்தோடு முஸ்லிம்களின் பாதுகாப்பு, உரிமைகள் விடயத்தில் யாருக்கும் சோரம் போகாது மக்களை ஓரணியில் திரட்டி போராடுவேன் என எனது நிலைபாட்டினை கட்சியின் உயர்பீட கூட்டத்தில் தெளிவு படுத்தியுள்ளேன்.
அளுத்கம தர்கா நகர், பேருவளை விவகாரம் தொடர்பாக கட்சி எடுக்கவேண்டிய முடிவினை தலைவரிடம் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வழங்கியுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் அதற்காக அதிரடி நடவடிக்கையினை கட்சித் தலைமை மேற்கொள்ளும் என்றார்.