கட்சியின் 34ஆவது சிறப்பு மாநாட்டினைத் தொடக்கிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, பராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.கே.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராதா கிருஷ்ணன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன், ரவிகரன், சிவமோகன், சர்வேஸ்வரன் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரை இரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மிகவும் இக்கட்டான ஒருகால கட்டத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினுடைய 34ஆவது வருட சிறப்பு மாநாட்டில் நாங்கள் எல்லோரும் கூடியிருக்கின்றோம்.
இலங்கை அரசின் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்ட பல்வேறுபட்ட சமூகங்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்த மேடையில் இன்று ஒன்றாகக் குழுமியிருக்கின்றோம். அரசாங்கத்தின் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களுடைய நம்பிக்கைகள், கலாசாரங்கள், பண்பாடுகள் அழிக்கப்பட்டு சிங்களப் பெரும் தேசியவாதிகள் கட்டளையிடுவது போன்று ஏனைய சிறுபான்மையினங்கள் வாழ வேண்டுமென்று கூறும் ஒரு காலகட்டத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்துக் கோயில்கள் உடைக்கப்படுகின்றன. கிறிஸ்தவ தேவாலயங்கள் உடைக்கப்படுகின்றன. முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன. பௌத்தத்தை தவிர ஏனைய மத நம்பிக்கைகள் இருக்கக் கூடாது என்ற அடிப்படையிலே அரசாங்கமும் அதன் பங்காளிக் கட்சிகளும் செயற்படுகின்றன.
இலங்கை அரசாங்கம் பொலிஸ் அதிகாரங்களைக் கொடுக்க முடியாது, காணி அதிகாரங்களைக் கொடுக்க முடியாது என்று பல்வேறு விதமான அரசியல் யாப்பிற்கு முரணான கருத்துக்களையும் பேசி வருகின்றது. ஆனால் வடக்கு, கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டபோது சுமார் 3 ஆயிரம் பேரைக் கொண்ட வட, கிழக்கிற்கான ஒரு பொலிஸ் துறையை உருவாக்கினோம். இதற்குத் தேவையான கல்வித் தகைமையுடன் பொலிஸ் துறைக்கான ஆளணியை உருவாக்குவதில் ஏற்பட்ட கால அவகாசத் தேவை காரணமாக குறைந்த பட்ச கல்வித் தகைமையுடன் ஆட்கள் உள்வாங்கப்பட்டார்கள். இதன் காரணமாக பொலிஸிற்கான முழு அதிகாரங்களையும் இவர்கள் கொண்டிருந்த பொழுதும் பொலிஸ் என்பதற்குப் பதிலாக இவர்களைக் குடிமக்கள் தொண்டர்படை என அழைத்தார்கள். அப்பொழுதிருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரச வர்த்தமானியில் பிரசுரித்த அரச கட்டளையின் பிரகாரமே இந்த 3 ஆயிரம் பேரும் பொலிஸ் துறைக்குத் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் மாகாண சபை கலைக்கப்பட்டதுடன் இந்தக் குடிமக்கள் தொண்டர்படையையும் அன்றைய பிரேமதாஸா அரசாங்கம் நிரந்தரமாக்குவதற்கு மாறாக கலைத்துவிட்டது என்பதுதான் கசப்பான உண்மையாகும்.
இதேபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை மாகாண சபை உள்வாங்கி அவர்களுக்கு திட்டமிடல் துறையில் பயிற்சியளித்து அவர்கள் திட்டமிடல் அதிகாரிகளாக, பணிப்பாளர்களாக வடக்கு, கிழக்கு முழுவதும் நியமிக்கப்பட்டனர். அவ்வாறு அன்று திட்டமிடல் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள்தான் இன்று வடக்கு, கிழக்கில் முக்கிய பொறுப்புக்களில் இருக்கின்றனர் என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் போதுமானவை அல்ல என்பதும் ஒற்றையாட்சிக்குள் இவ்வதிகாரங்கள் பறிக்கப்படலாம் என்பதும் இன்றுவரை இருக்கக்கூடிய நிதர்சனமான உண்மையாகும். ஆனாலும் கூட எமக்குக் கிடைத்த அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியன்தன் காரணமாகத்தான் வடக்கும் கிழக்கும் 18 வருடங்கள் இணைந்திருந்தன என்பதையும் வடக்கு, கிழக்கு நிர்வாகத்திற்கான கட்டுமானங்களை உருவாக்கினோம் என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்திய இலங்கை ஒப்பந்தமானது உருவாக்கப்பட்டதில் அமரர் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஒரு முக்கிய பங்கு இருந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் பேசப்பட்ட விடயங்கள் அனைத்தும் பதின்மூன்றாவது அரசியல் சாசனத் திருத்தத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பதும் இலங்கை அரசாங்கம் தமிழ்த் தலைமைகளுக்குத் தெரியாமல் இதனை நிறைவேற்றியது என்பதும் பின்னர் நாங்கள் புரிந்துகொண்ட விடயங்கள். ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை எந்தவொரு அரசாங்கமும் மாகாண சபைக்கு உரித்தான அதிகாரங்களைக் கூட முழுமையாகப் பகிர்வதற்குத் தயராக இருக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதனை சர்வதேச உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளதுடன் இன்று தமிழ் மக்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதிகளாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ளது. இவ்வாறு தமிழ் மக்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சி எந்தவிதமான கட்டமைப்புக்களோ பொறிமுறைகளோ இன்றிச் செயற்படுவதானது தமிழ் மக்களினுடைய விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருக்க முடியாது என்பதை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைப் பெற்று மிகப் பெரிய பலத்துடன் நாங்கள் ஆட்சி அமைத்தோம். மக்களுக்கும் பாரிய எதிர்பார்ப்புக்களும் இருந்தது. ஆனால் இலங்கை அரசாங்கம் முதலமைச்சரும் அமைச்சரவையும் செயற்படுத்த வேண்டிய அதிகாரங்களைச் செயற்படுத்த விடாமல் அல்லது அதனைச் செயற்படுத்த ஒத்துழைக்காமல் ஆளுநர் வசமும் பிரதம செயலாளர் வசமும் அதிகாரங்களை வைத்திருப்பதால் மாகாண சபை முழுமையாக இயங்க முடியாத துர்ப்பாக்கிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் வடமாகாண ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் அது நீடிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் நீண்டகாலமாக யுத்தம் நடந்த பூமியில் அந்த யுத்தத்தை நடத்திய
வரும் பல நூறு பொதுமக்களின் அழிவிற்கும் காணாமல்போவதற்கும் காரணமாயிருந்தவரை ஆளுநராகத் தொடர்ந்து வைத்திருப்பது அம்மண்ணில் ஒரு ஜனநாயக சூழல் உருவாகவோ உதவிகரமாக அமையாது என்ற அடிப்படையில் அதிகாரப் பகிர்வில் நம்பிக்கை கொண்ட கூட்டாட்சி தத்துவதில் நம்பிக்கை கொண்ட சிவில் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை ஆளுநராக நியமிப்பதன் மூலம் இனப்பிரச்சினைத் தீர்விற்கு ஒரு வழியைத் திறந்துவிடும் என எதிர்பார்த்தோம்.
ஆனால் அரசாங்கம் அதனைப் புரிந்துகொள்வதாக இல்லை. மாறாக வடக்கு மாகாண நிர்வாகத்தை முடக்கக் கூடிய வகையிலும் வடக்கு மாகாணம் தொடர்பான அரசின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் வல்லமை வாய்ந்த இராணுவ அதிகாரியையே அரசு தொடர்ந்து வைத்திருக்கின்றது. இராணுவ ஆக்கிரமிப்பு, இராணுவ நிர்வாகம் போன்றவற்றிக்கு ஒத்துழைக்கக்கூடிய ஓர் ஆளுநரையே அவர்கள் நியமித்துள்ளார்கள்.
இந்த மேடையில் இன்று உருவாக்கியிருக்கின்ற சந்திப்பானது தொடர வேண்டும் என்பதுடன் அத்தகையதொரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை உருவாக்க அடிப்படையாக இருக்க வேண்டுமென்றும் நான் இந்த மேடையிலுள்ள தலைவர்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். நாங்கள் ஐக்கியப்படுவோமாக இருந்தால் சிங்கள பௌத்த தேசிய வாதம் எங்களை எதுவும் செய்துவிட முடியாது, மாறாக நாம் கௌரவமாகவும் தலைநிமிர்ந்தும் வாழ்வதற்கு எமக்கிடையில் ஏற்படக்கூடிய ஐக்கியம் ஒன்றே அதற்குரித்தான வழியென்று நான் கருதுகின்றேன் என்றார்.
Post a Comment