BREAKING NEWS

அரசாங்கம் இன்று சர்வதேசத்தின் பிடியில்

சர்வதேச நிபுணர் குழுவின் தீர்மானங்கள் அரசாங்கத்திற்கு சாதகமாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுமாயின் அவ்வாறானதொரு குழுவினை நியமிப்பதில் அர்த்தமில்லை எனத் தெரிவிக்கும் ஜே.வி.பி. சர்வதேச குழுவொன்றிற்கு இடமில்லை என பிடிவாதமாக இருந்த அரசாங்கம் இன்று சர்வதேசத்தின் பிடியில் சிக்கி விட்டது எனவும் குறிப்பிட்டது.
 
காணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச நிபுணர் குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
 
காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் இதுவரை காலமும் அக்கறை செலுத்தாது இப்போது சர்வதேச விசாரணையொன்று ஏற்படுத்தப்பட்டவுடன் இங்கு விசாரணைகளை பலப்படுத்துவதாக கூறுகின்றனர். காலம் கடந்த பின்னர் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வதால் எவ்விதபயனும் இல்லை. யுத்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்திடம் இப்போதைக்கே பல ஆதாரங்கள் திறப்படப்பட்டு விட்டது. இலங்கை மீதும் இராணுவ குற்றச்சாட்டுக்கள் நடந்துள்ளதென்று அரசாங்கத்தின் மீதும் குற்றம் சுமத்துவதற்கு போதுமான அளவு ஆதாரங்கள் சர்வதேசத்தின் வசம் உள்ளது. இவை உண்மையானவையா? அல்லது பொய்யான ஆதாரங்களா? என்பது பற்றி இனி பேசுவதை விட நாட்டில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளையே இனி பார்க்க வேண்டும்.
 
இலங்கையில் விசாரணைக் குழுவொன்றினை ஆரம்பித்து குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதை ஆராய்வதாகவும் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதாகவும் அரசாங்கம் கடந்த சில காலங்களில் இருந்து கூறி வருகின்றது. அதேபோல் இலங்கை விடயத்தில் சர்வதேச தலையீடு இருக்கக் கூடாது. அதற்கு ஒரு போதும் இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால் தற்போது சர்வதேச நிபுணர் குழுவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தங்கள் அரசின் மீது அதிகரித்திருக்கின்றமையாலும் அரசாங்கத்தினால் தற்போது தன்னிச்சையாக எவ்வித முடிவும் எடுக்க முடியாதுள்ளது என்பதும் தெளிவாக தெரிகின்றது.
 
மேலும், சர்வதேச நிபுணர் குழுவின் தீர்மானங்கள் அரசாங்கத்திற்கு இருப்பின் மட்டுமே ஏற்றுக் கொள்வோம் என அரசாங்கம் சொல்வதனால் இவ் விசாரணைக் குழுவும் அர்த்தமற்றது என்பது விளங்குகின்றது. நிபுணர் குழுவினர் அரசாங்கத்திற்கு சாதகமான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டுமாயின் அவ்வாறானதொரு நிபுணர் குழு அமைப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. தொடர்ந்தும் அரசாங்கம் மக்களை ஏமாற்ற முயற்சிக்குமாயின் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சர்வதேச வலையில் சிக்கியுள்ள அரசாங்கம் மக்களின் எதிர்ப்பினையும் வெகுவிரைவில் முகம்கொடுக்க நேரிடும் எனத் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar