ரணிலின் கேள்விகளுக்கு ஹக்கீம் இப்படி பதில் கூறுகிறார்
l
என்பது தொடர்பில் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் எழுப்பப்பட்ட அளுத்கம சம்பவம் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23 இன் கீழான கேள்வி தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் இங்கு மேலும் கூறுகையில்;
அளுத்கம வன்முறைச் சம்பவம் கடந்த மாதம் 15ஆம் திகதியும் தொடர்ந்து 16ஆம் திகதியும் இடம்பெற்றிருந்தது. சம்பவம் நிகழ்ந்தவுடன் நிலைமைகளை அறியும் வகையில் அங்கு நானே முதலில் சென்றிருந்தேன். அப்போது வலப்பிட்டிய எனும் பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டிருப்பதாக மக்கள் தெரிவித்தனர். அவ்வாறு கொல்லப்பட்டமைக்கான சான்றுகளும் இருந்தன.
இங்கு இடம்பெற்ற புலனாய்வுப்பிரிவு விசாரணை மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டிருந்தன. இந்த வன்முறைச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். அதேவேளை, ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்திலேயே கொல்லப்பட்டிருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது. எனினும், மற்றையவர் துப்பாக்கிச் சூட்டினால்தான் கொல்லப்பட்டாரா என்பது தொடர்பில் இது வரையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனால் புதைக்கப்பட்ட சடலங்களை மீண்டும் தோண்டி எடுக்கவேண்டிய நிலையே உருவாகியுள்ளது.
அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட தடயங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னரே அங்கு துப்புரவு வேலைகள் இடம்பெற்றன. தீவிபத்து ஒன்று இடம்பெற்று அது சந்தேகிக்கப்படும் நிலை இருந்தால் மட்டுமே இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேவை எழுகின்றது. பாணந்துறையில் வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டமை சம்பவம் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.
ஆனாலும், அளுத்கம மற்றும் பேருவளை சம்பவத்தில் இடம்பெற்ற வன்முறை மற்றும் தீவைப்பு ஆகியவற்றை குண்டர் குழுக்களே நடத்தியிருந்தன என்பது தெளிவாகும். ஆகவே, அங்கு இரசாயன பகுப்பாய்வுப் பிரிவினரை அழைக்கும் தேவை எழுந்திருக்கவில்லை. அளுத்கம சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இதன்மூலம் உண்மைநிலை வெளிப்படும் என்றார்.-வீரகேசரி